புத்ராஜெயா: மலேசியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் இலக்குடன் நாட்டிற்காகப் புதிய முழக்கவரியை அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் நேற்று அறிமுகப்படுத்தினார்.
'மலேசியா மடானி' எனும் அந்த முழக்கவரி பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை முக்கிய கொள்கை
களாகக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
மடானி எனும் மலாய்ச் சொல்லுக்கு நாகரிகம் அல்லது நவீனம் என்று பொருள். நேற்று புத்ரா
ஜெயாவில் திரு அன்வார் பேசியபோது, நீடித்த நிலைத்தன்மை, பரிவு, இரக்கம், மரியாதை, புத்தாக்கம், செல்வச் செழிப்பு, நம்பிக்கை ஆகியவற்றுக்கான மலாய் சொற்களின் சுருக்கமே இந்த மடானி என்று தெரிவித்தார்.
இனப் பாகுபாடின்றி மலேசியர்கள் அனைவருக்கும் உதவி வழங்கப்படும் என்று திரு அன்வார் உறுதி அளித்தார்.
இனம், சமயம் ஆகியவை தொடர்பாக மலேசியர்களின் மனப்போக்கை மாற்றி அமைக்க தாம் விரும்புவதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரதமர் பதவியை ஏற்ற திரு அன்வார் கூறினார்.
இதற்கு முன்பு இனம், சமயம் அடிப்படையில் மலேசிய அரசியல் சூழல் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
"மலேசியாவில் பெரும்பான்மை இனத்தவர்கள் மலாய்க்காரர்களே. இவர்கள் தொடர்ந்து நாட்டின் முக்கிய தூணாக இருப்பர். மலேசியாவில் இஸ்லாத்துக்கும் மலாய் மொழிக்கும் மலாய் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இருப்பினும், நாங்கள் பல இன மக்களைக் கொண்ட நாடாகத் திகழ்கிறோம்.
"சிறுபான்மை இனத்தவர்கள், வசதி குறைந்தவர்கள், கிராமங்களில் வசிப்பவர்கள், சாபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்தவர்களைப் பின்தங்க வைத்துவிட்டு நாட்டை மேம்
படுத்த விரும்பவில்லை," என்றார் திரு அன்வார்.
திரு அன்வார் தலைமை
யிலான அரசாங்கம் பல இன நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணியால் அமைக் கப்பட்டுள்ளது. இருப்பினும்,
பிரதமர் பதவியில் நீடிக்க மலாய்-முஸ்லிம் சமூகத்தினரின் ஆதரவு தமக்கு அவசியம் என்பது திரு அன்வாருக்குத் தெரியும்.
"மலேசியாவின் பொருளியல் துடிப்புடன் மேம்பட வேண்டும். அதே சமயம் மலேசியர்கள் யாரும் பின்தங்கிவிடக்கூடாது. அரசாங்கம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
"முன்பு செய்த தவறுகளைச் சரிசெய்தால் நாட்டைக் காப்பாற்றிவிடலாம்.
"மலேசியாவை மீண்டும் புகழின் உச்சத்துக்குக் கொண்டு செல்லலாம்," என்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் திரு அன்வார் வலியுறுத்தினார். நேற்று நடைபெற்ற அந்த நிகழ்வில் மலேசிய அமைச்சர்கள், மூத்த அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
நேற்றைய நிகழ்வில் திரு அன்வார் புனைந்த 'டெவலப்பிங் எ மடானி நேஷன்' எனும் தலைப்பிலான நூலும் வெளியிடப்
பட்டது.

