பேலஸ்-யுனைடெட் சமநிலை;
டென் ஹாக் ஏமாற்றம்
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கும் கிறிஸ்டல் பேலசுக்கும் இடையிலான ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஆட்டம் முடிய சில வினாடிகளே எஞ்சியிருந்தபோது ஃப்ரீ கிக் மூலம் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது பேலஸ். இன்னும் கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்திருந்தால் மூன்று புள்ளிகள் பெற்று லீக் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு யுனைடெட் முன்னேறியிருக்கும். அதுமட்டுமல்லாது, யுனைடெட்டின் முன்னாள் நிர்வாகி அலெக்ஸ் ஃபெர்குசன் காலத்தில், 2009ஆம் ஆண்டில் யுனைடெட் தொடர்ந்து பத்து ஆட்டங்களில் வென்றது. பேலசுக்கு எதிரான ஆட்டத்தில் யுனைடெட் வெற்றி பெற்றிருந்தால் இந்தச் சாதனையை அது மீண்டும் பதிவு செய்திருக்கும். அது நிறைவேறாதது தற்போதைய நிர்வாகி டென் ஹாக்கிற்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
காணொளி உதவி நடுவர் முறை; ரசிகர்களுக்கு விளக்கமளிக்கப்படும்
லண்டன்: 12 மாதச் சோதனைத் திட்டமாகக் காற்பந்தாட்டங்களின்போது காணொளி உதவி நடுவர் முறை வாயிலாக எடுக்கப்படும் முடிவுகள் குறித்து விளையாட்டரங்கத்தில் இருப்பவர்களுக்கும் தொலைக்காட்சியில் ஆட்டத்தைக் காணும் ரசிகர்களுக்கும் சம்பந்தப்பட்ட நடுவர்கள் விளக்கமளிப்பர் என்று அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (ஃபிஃபா) கூறியுள்ளது.
ரொனால்டோ-மெஸ்ஸி ஆட்டம்: சிறப்பு டிக்கெட் $3.52 மில்லியன்
ரியாத்: சவூதி அரேபியாவின் அல் நாசர் குழுவும் அல் ஹிலால் குழுவும் இணைந்து பிரான்ஸின் பாரிஸ் செயிண்ட் ஜெமேன் குழுவுடன் மோதுகின்றன.
இந்த ஆட்டத்துக்கான சிறப்பு நுழைவுச்சீட்டுக்கான ஏலக்குத்தகை நடத்தப்பட்டது. சிறப்பு நுழைவுச்சீட்டை AqarOne சொத்துக் குழுமத்தின் தலைமை மேலாளர் முஸ்ரஃப் அல் கம்டி 2.66 மில்லியன் அமெரிக்க டாலர் (S$3.52 மில்லியன்) கொடுத்து வாங்கியதாக சவூதி அரசாங்கம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
சிறப்பு நுழைவுச்சீட்டை வாங்கியவர் ஆட்டத்துக்குப் பிறகு நடத்தப்படும் விழாவில் கலந்துகொள்வார். ஆட்டக்காரர்களுக்கான அறைகளுக்குள் அவர் செல்லலாம். அத்துடன் அல் நாசருக்காக விளையாடும் கிறிஸ்டியானோ ரொனால்டோவையும் பாரிஸ் செயிண்ட் ஜெமேனுக்காக விளையாடும் மெஸ்ஸியையும் அவர் சந்திப்பார்.

