விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
083681c5-7f37-4843-9794-1ac56380232a
-

சிங்கப்பூரில் முதன்முறையாக இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணம்

சிங்கப்பூர்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணம் முதன்முறையாக சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்படுகிறது. வரும் வியாழக்கிழமையன்று அந்தப் பிரசித்திபெற்ற கிண்ணத்தை நேரில் காண சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

வெள்ளியால் செய்யப்பட்ட அந்த 61.5 சென்டிமீட்டர் உயர, 6.3 கிலோ எடை கொண்ட கிண்ணம் முதல்முறையாக ஆசிய பசிபிக் நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

இங்கிலாந்திலிருந்து முதலில் வரும் திங்கட்கிழமையன்று சிட்னிக்குக் கொண்டு செல்லப்பட்டு, புதன்கிழமையன்று அங்கிருந்து மலேசிய தலைநகரம் கோலாலம்பூருக்கு அது கொண்டு செல்லப்படும். வியாழனன்று கிண்ணம் சிங்கப்பூரில் இருக்கும். பயணத்தின் இறுதி அங்கமாக அது தென்கொரியாவுக்குக் கொண்டு செல்லப்படும்.

சிங்கப்பூரில் எமிரேட்ஸ் எஃப்ஏ கிண்ணம்-சிங்டெல் ஒன்றிணைந்து கிண்ணத்தை நேரில் காணும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட விருந்தினர், ரசிகர்கள் ஆகியோர் மட்டுமே கிண்ணத்துக்கு மிக அருகில் சென்று பார்க்கலாம்.

முன்னாள் இங்கிலாந்து காற்பந்து ஆட்டக்காரர், எஃப்ஏ கிண்ண வெற்றியாளருடன் இணையம் வாயிலாகச் சந்தித்துப் பேச 20 ரசிகர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த முன்னாள் ஆட்டக்காரர் யார் என்பது குறித்து நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தகவல் தெரிவிக்கவில்லை.

ஆட்டத்தில் கோல் மழை; மெஸ்ஸியின் குழு வென்றது

ரியாத்: சவூதி அரேபியாவில் அல் நாசர், அல் ஹிலால் குழுக்களின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் ஒன்றிணைந்து ஓர் அணியாக பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெமேனுடன் நேற்று முன்தினம் மோதினர்.

சவூதி தரப்பில் களமிறங்கிய குழுவில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றிருந்தார். எதிரணியில் அண்மையில் உலகக் கிண்ணத்தை ஏந்திய லயனல் மெஸ்ஸி களமிறங்கினார். ஆட்டத்தில் கோல் மழை பொழிந்தது. இறுதியில் ஆட்டம் 5-4 எனும் கோல் கணக்கில் பாரிஸ் செயிண்ட் ஜெமேனுக்குச் சாதகமாக முடிந்தது. இந்த ஆட்டம் சவூதி அரேபியாவின் கிங் ஃபஹாட் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஆட்டத்தில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் கோல் போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீள்திறனுடன் போராடி ஸ்பர்சை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவை 4-2 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் ஸ்பர்ஸ் முன்னிலை வகித்தது.

இருப்பினும், மனந்தளராமல் விளையாடிய சிட்டி, அடுத்தடுத்து கோல்களைப் போட்டு ஆட்டத்தைக் கைப்பற்றியது. சிட்டி வெற்றி பெற்றபோதிலும் தமது விளையாட்டாளர்கள் முனைப்புடன் விளையாடவில்லை என்று அக்குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலா அதிருப்தி தெரிவித்தார்.