டிக்டாக் பயன்பாட்டிற்கு அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தடை
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜார்ஜியா, டெக்சஸ், ஒக்லஹோமா, அலபாமா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் டிக்டாக்கிற்கு எதிராகத் தடை விதித்துள்ளன.
அரசாங்க அமைப்புகள் வழங்கியுள்ள திறன்பேசிகளில் டிக்டாக் தளத்தைப் பதிவிறக்கம் செய்ய ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளது. தளத்தை பயன்படுத்துவோரின் தனிநபர் தகவல்கள் சேகரிக்கப்பட்டுச் சீன அரசாங்கத்திடம் பகிர்ந்துகொள்ளப்படும் என்ற கவலையே தடைக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. தேசிய பாதுகாப்பைக் கருதி அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு முழுமையான தடையை விதிக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்துவருகிறது.
இந்நிலையில் மாணவர்கள் இத்தடையை எதிர்த்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இருக்கைவார் அணியாத பிரிட்டிஷ் பிரதமர் சுனக்கிற்கு அபராதம்
லண்டன்: காரில் செல்லும்போது இருக்கைவார் அணியாததால் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் சுனக் காரில் சென்றபடி, நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான தமது கொள்கைகள் குறித்து பேசிய காணொளி ஒன்று அவரது சமூக ஊடக பக்கங்களில் பகிரப்பட்டிருந்தது. அதில் அவர் இருக்கைவார் அணியாமல் காரில் பயணம் செய்தது சர்ச்சையானது. அது குறித்து விசாரித்து வருவதாக லங்காஷியர் காவல்துறை நேற்று முன்தினம் கூறியிருந்தது. இந்நிலையில் அவருக்கு 500 பவுண்டு (819 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, பிரதமர் சுனக் தமது தவற்றை முழுமையாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளதாக பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
ஒருமுறை மட்டும் பயன்படும் பொருள்களுக்குத் தடை
தைப்பே: தைவான் தங்குவிடுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு இனி ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பொருள்களை வழங்கத் தடை விதிக்கப்படும். பல்துலக்கும் குச்சி, சீப்பு, குளியலுக்கான தலை உறை, விடுதி அறை காலணிகள் போன்றவை இனி வழங்கப்படாது. மேலும் மிகச்சிறிய போத்தல்களில் வழங்கப்படும் குளியலறை பொருட்களுக்கும் இத்தடை பொருந்தும். மாறாக, தங்களுக்குத் தேவை என்றால் வாடிக்கையாளர்கள் அவற்றை கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.
இவை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

