ஜகார்த்தா: தமது உணவு ஆதாரத்தை விரிவுபடுத்த முயலும் இந்தோனீசியா அரிசி, கோதுமை ஆகியவற்றைத் தாண்டி அதன் பண்டைய பிரபல உணவான சோளத்தை பயிர் செய்வதில் மீண்டும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது.
அரிசியை முக்கிய உணவுப் பொருளாக கொண்டுள்ள இந்தோனீசியா, இவ்வாண்டின் இறுதிக்குள் 30,000 ஹெக்டரும் அடுத்த ஆண்டிற்குள் 40,000 ஹெக்டர் அளவிலும் சோளத்தைப் பயிர் செய்ய இலக்கு கொண்டுள்ளது. தற்போதைக்கு அங்கு 10,000 ஹெக்டருக்கும் குறைவான அளவிலேயே சோளம் பயிரடப்படுகிறது.
இந்தோனீசியாவின் இப்போதைய மக்கள்தொகை 270 மில்லியனாகும். வளர்ந்து வரும் தமது மக்கள்தொகைக்கு உணவளிக்கும் வகையில் அரிசி, கோதுமைக்கு மாற்று உணவுத் தேவைப்படுவதால், சோளப் பயிரின் உற்பத்தி, நுகர்வை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயம் இந்தோனீசிய அரசாங்கத்திற்கு உள்ளது.
அதுமட்டுமல்லாமல், அரிசியைவிட சோளம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
அதாவது சோள விவசாயத்திற்கு அரிசியைப் போல் அதிக தண்ணீர் தேவைப்படாது. வறண்ட சூழலிலும் சோளம் செழித்து வளரும்.
மேலும் சோளத்தில் மாவுச்சத்து மட்டுமல்லாமல் புரதம், தாதுக்கள், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவையும் உள்ளன.
இந்தோனீசியாவிற்கு சோளம் ஒன்றும் புதிய உணவு இல்லை என்றாலும், தற்போதைய தலைமுறையில் வெறும் ஐந்து விழுக்காட்டினருக்கு மட்டுமே சோளத்தைப் பற்றி தெரிந்துள்ளதாக சோள வியாபாரி ஒருவர் சொன்னார்.

