அமெரிக்காவில் கலிஃபோர்னியா நகரில் சீனப் புத்தாண்டு அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பத்து பேர் மாண்டனர்.
தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் தன்னைத்தானே சுட்டுக்கொன்று மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடவர் இருந்த வாகனத்தை காவல்துறையினர் சுற்றிவளைத்துபோது வாகனத்திலிருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் வாகனத்தை சோதனையிட்டபோது சந்தேக நபர் மாண்டுகிடந்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர். மாண்டவர் 72 வயதான ஹூ கான் டிரான் (Huu Can Tran) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தாக்குதலை ஒருவர் மட்டுமே மேற்கொண்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதற்கான காரணம் ஆராயப்பட்டுவருவதாகக் கூறப்பட்டது.
மொண்டரி பார்க் (Monterey Park) எனும் இடத்தில் சீனப் புத்தாண்டை கொண்டாட பல்லாயிரம் ஆசியர்கள் கூடியிருந்தபோது, அங்கு வந்த ஆடவர் ஒருவர் மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் பத்து பேர் மாண்டதோடு, மேலும் பத்து பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.

