பேங்காக்: சீனாவிலிருந்து சுற்றுப்பயணமாக தாய்லாந்தின் பட்டாயா நகருக்குச் சென்ற பெண் ஒருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு சிறப்பு சேவை வழங்கிய சம்பவத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
குடிநுழைவு வாயிலில் விரைவுச் சேவைப் பிரிவில் வெளியே வந்த அந்தப் பெண் அவரது உல்லாச ஓய்வு விடுதிக்கு ஒரு மணி நேரத்தில் சென்றுவிட்டார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் வழக்கமான வாகனச் சேவையில் சென்றிருந்தால் அவருக்கு மூன்று மணி நேரம் ஆகியிருக்கும்.
ஆனால், பணம் கொடுத்து மூன்று காவல்துறையினரை 'சிறப்புச் சேவை' புரிய தாம் அமர்த்தியதாக 'டிக்டாக்' பதிவில் அந்தப் பெண் பதிவிட்டார்.
அந்தக் காணொளியில் இரண்டு போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளும் ஒரு சுற்றுப்பயண காவல்துறை அதிகாரியும் காணப்பட்டனர்.
போக்குவரத்தில் முந்திச் செல்ல 'சைரன்' சேவையையும் காவல்துறையினர் வழங்கினர். இந்த சிறப்புச் சேவைக்காக தாம் 7,000 பாட் (S$280) வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
காணொளி வேகமாகப் பரவி, விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து தேசிய தலைமை காவல்துறை அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் பெண்ணிடமும் அதிகாரிகளிடமும் விசாரணை தொடர்ந்து நடை
பெறுவதாகவும் காவல்துறைத் தலைமை அலுவலகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் அட்சாயோன் கிரைத்தோங் தெரிவித்தார்.

