செகாமட்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வெள்ளம் காரணமாக 1,093 பேர் வெளியேற்றப்பட்டு தற்காலிகத் துயர்துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
செகாமட், கோத்தா திங்கி, குளுவாங் ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தெனாங் லாபிஸ் கிராமத்தி லிருந்து 413 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
"அந்தக் கிராமத்தில் 119 குடும்பங்கள் உள்ளன. மொத்தம் 413 கிராமவாசிகள் உள்ளனர். அவர்களில் 16 பேர் உடற்குறையுள்ளவர்கள், 39 பேர் முதியவர்கள், எட்டு குழந்தைகள்," என்று ஜோகூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் இடைக்கால இயக்குநர் முகம்மது ரீசால் புவாங் நேற்று தெரிவித்தார்.
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஜோகூரில் உள்ள பயா மேரா லாமா கிராமமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கிராமத்திலிருந்து நான்கு பேர் அவர்களது வீடு
களிலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பெக்கான் ஆயர் பானாஸ் கிராமத்திலிருந்து 70 வயது முதியவர் ஒருவர் மீட்கப்பட்டு துயர்துடைப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக திரு ரீசால் புவாங் கூறினார்.
ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய 432 இடங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவற்றை மிகவும் உன்னிப்
பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

