பண்டார் ஸ்ரீ பகவான்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் புருணைக்கு இரண்டு நாள்கள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் புருணை சென்றடைந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலேசியப் பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு இது திரு அன்வார் மேற்கொள்ளும் இரண்டாவது அதிகாரத்துவ வெளிநாட்டுப் பயணமாகும். திரு அன்வாருடன் அவரது மனைவி டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் புருணை சென்றுள்ளார். திரு அன்வாரும் அவரது மனைவியும் சென்ற விமானம் நேற்று பிற்பகல் 3.13 மணிக்கு புருணை அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அவர்களை பட்டத்து இளவரசர் அல் முஹ்தாடீ பில்லா சுல்தான் ஹசனல் போல்கியாவும் அவரது மனைவியான இளவரசியார் சாராவும் வரவேற்றனர்.
திரு அன்வாருக்கு விமான நிலையத்தில் சடங்குபூர்வ
வரவேற்பு வழங்கப்பட்டது.
புருணை மன்னர் ஹசனல் போல்கியாவை திரு அன்வார் இன்று சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை
அடுத்து, மலேசியா-புருணை இருதரப்பு நல்லுறவுக் கூட்டத்தில் திரு அன்வார் கலந்துகொள்ள இருக்கிறார். மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் புருணை முதலீட்டு ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாகத் தெரிவிக்கப்
பட்டது.