கரபாவ் லீக் கிண்ண இறுதிப் போட்டியை நெருங்கும் யுனைடெட்
இங்கிலிஷ் கரபாவ் லீக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை வலுவாக்கிக்கொண்டுள்ளது மான்செஸ்டர் யுனைடெட் குழு. நேற்று அதிகாலை நடைபெற்ற முதல் சுற்று அரையிறுதி ஆட்டத்தில் யுனைடெட் 3-0 என்ற கோல் கணக்கில் நாட்டின்ஹம் ஃபாரஸ்ட் குழுவைத் தோற்கடித்தது.
ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்திலேயே யுனைடெட் டின் மார்கஸ் ரெஷ்ஃபர்ட் தமது அணியின் முதல் கோலைப் போட்டார். பின்னர் முற்பாதி ஆட்டம் முடியும் தருவாயில் வோட் வியர்ஹோஸ்ட் யுனைடெட்டின் இரண்டாவது கோலைப் போட்டு கோல் எண்ணிக்கையை 2-0 என்று உயர்த்தினார்.
பின்னர் ஆட்டத்தின் 89வது நிமிடத்தின் யுனைடெட் அணித் தலைவர் புருனோ ஃபெர்னான்டஸ் மேலும் ஒரு கோல் போட்டு 3-0 என்று கோல் கணக்கில் தமது குழுவின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இரண்டாம் சுற்று அரையிறுதி ஆட்டம் யுனைடெட்டின் ஓல்டு டிராஃபர்ட் அரங்கில் நடைபெறும். இரண்டு ஆட்டங் களையும் சேர்த்து அதிக கோல் போட்டியிருக்கும் அணிதான் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.
அகதியாக வந்த ஆட்டக்காரர்
தலைசிறந்த ஆஸ்திரேலியர் ஆனார்
சிட்னி: ஆஸ்திரேலிய தேசிய காற்பந்துக் குழு ஆட்டக்காரரான ஆவெர் மாபில் 2023ன் தலைசிறந்த இளம் ஆஸ்திரேலியர் என்று விருதைப் பெற்றிருக்கிறார்.
கிழக்கு ஆப்பிரிக்க அகதி முகாம்களில் அவர் செய்துவரும் சமூகப் பணிக்காக அவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. 27 வயது மாபிலின் பெற்றோர் தென் சூடானைச் சேர்ந்தவர்கள். போரால் அங்கிருந்து தப்பியோடி அவர்கள், கென்யாவில் உள்ள அகதி முகாம் ஒன்றில் தங்கி இருந்தனர். மாபில் அங்குதான் பிறந்தார்.
தமது பத்தாவது வயதில் பெற்றோருடன் அவர் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார். 2022 ஃபிஃபா உலகக் காற்பந்துக் கிண்ணப் போட்டிகளுக்கு ஆஸ்திரேலியா தகுதிபெற அவர் உதவினார்.
ஆப்பிரிக்க அகதி முகாம்களுக்கு காற்பந்துகளையும் மருந்துகளையும் அவர் அனுப்பி வருகிறார்.

