கோலாலம்பூர்: மலேசிய பள்ளி களிலும் உயர்கல்வி நிலையங் களிலும் இஸ்லாமிய சமயக் கல்வி, பொதுவான பண்புகளையும் மனிதநேயத்தையும் வலியுறுத்தும் வகையில் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப் ராகிம் கூறியுள்ளார்.
மலேசியா பல இன, பல சமய நாடாக தொடர்ந்து நீடிப்பதை உறுதிசெய்ய, மக்களிடையே சமயங்களைப் பற்றிய மேம்பட்ட புரிந்துணர்வு இருக்கவேண்டும் என்று அவர் நேற்று கூறினார். அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் ஒரு நூல் வெளியீட்டில் அவர் கலந்துகொண்டார்.
பொதுப்படையான பண்புகள், ஒழுக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இஸ் லாமியக் கல்விப் பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும் என்று முக்கிய சமயக் கல்விமான்கள் பரிந்துரைத்துள்ளதாக திரு அன்வார் குறிப்பிட்டார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மை வகிக்கும் மலேசியா அண்மைய ஆண்டுகளில் பழைமைவாதப் போக்குக்கு மாறியுள்ளது. கல்வி நிலையங்களில் இஸ்லாமியக் கல்வியில் அச்சமயம் குறித்த குறுகிய பார்வை கற்றுத்தரப் படுவதும் அதற்கான காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
திரு அன்வார், 'மலேசியா மடானி' எனும் தமது புதிய அரசாங்கத்துக்கான முழக்கவரியைக் கடந்த வாரம் வெளியிட்டார். 'மடானி' எனும் சொல் அரபு மொழியில் நவீனத்தைக் குறிக்கிறது. மலேசியாவில் இனம், சமயம் பற்றிய பார்வையை மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

