கியவ்: உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது.
உக்ரேனுக்கு எதிராக கூடுதல் வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா நடத்தக்கூடும் என்று உக்ரேனிய ராணுவம் அச்சம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் ரஷ்யா நடத்திய ஏவுகணை, ஆளில்லா வானூர்தித் தாக்குதல்கள் காரணமாக உக்ரேனில் குறைந்தது 11 பேர் மாண்டனர்.
உக்ரேனுக்கு கவச வாகனங்களை அனுப்பிவைக்க மேற்கத்திய நாடுகள் அண்மையில் உறுதி அளித்திருந்தன.
இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்தது. உக்ரேனுக்கு உதவ முன்வந்துள்ள மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பதிலடி கொடுக்கும் வகையிலும் ரஷ்யாவின் நேற்று முன்தினத் தாக்குதல் அமைந்தது. உக்ரேனில் உள்ள 60க்கும் மேற்பட்ட நகரங்கள், கிராமங்கள் மீது ரஷ்யப் படைகள் மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தியதில் அவ்விடங்களில் மிக மோசமான சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் உக்ரேனில் உள்ள பல்வேறு இடங்களில் ரஷ்யப் படைகளைப் பின்வாங்க வைத்திருப்பதாக உக்ரேனிய ராணுவம் கூறியது.
ரஷ்யப் படைகளின் முகாம், இரண்டு பீரங்கித் தளங்கள், ஓர் ஆயுதக் கிடங்கைத் தகர்த்துவிட்டதாக அது தெரிவித்தது.
ரஷ்யா பாய்ச்சிய 59 ஏவுகணைகளில் 47 ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரேனிய ராணுவம் கூறியது.
இதற்கிடையே, உக்ரேனுக்கு எதிராகப் புதிய வியூகம் வகுத்து தாக்குதல் நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தயாராக இருப்பதாக உக்ரேனிய
உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மை காலத்தில் போரில் பல பின்னடைவுகளை ரஷ்யா சந்தித்தது. புதிய வியூகம் நிலைமையை மாற்றி ரஷ்யாவுக்கு வெற்றியைத் தரும் என்று ரஷ்ய அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா சர
மாரியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதால் ரஷ்யாவுக்கு எதிராகக் கூடுதல் தடைகளை விதிக்க வேண்டும் என்று ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது.

