இறுதிச் சுற்றில் தோல்வி; விடைபெற்றுக்கொண்ட சானியா
மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா-போபண்ணா ஜோடி பிரேசிலின் லூசா ஸ்டெபானி-ரபெல் மேட்டோஸ் ஜோடியுடன் மோதியது. இதில் சானியா மிர்சா-போபண்ணா ஜோடி 6-7 (2-7), 2-6 எனும் ஆட்டக் கணக்கில் தோல்வி அடைந்தது. பிரேசில் ஜோடி வெற்றியாளர் பட்டத்தை வென்றது. சானியா மிர்சா, அடுத்த மாதத்துடன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியில் கிண்ணம் வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது தோல்வி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற நோவாக் ஜோகோவிச்
மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றுக்கு செர்பிய நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிச் சுற்தில் அவர் அமெரிக்காவின் டாமி பாலை 7-5, 6-1, 6-2 எனும் ஆட்டக் கணக்கில் தோற்கடித்தார்.
இறுதிச் சுற்றில் ஜோகோவிச், கிரீசின் ஸ்டெஃபானோசுடன் மோதுகிறார்.
ரொனால்டோவின் அல் நாசர் குழு தோற்று வெளியேறியது
ரியாத்: சவூதி அரேபியாவின் சூப்பர் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதியில் தோல்வியின் பிடியில் சிக்கி வெளியேறியுள்ளது அல் நாசர் குழு. அக்குழுவின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கோல் போட பல பொன்னான வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றை அவர் நழுவவிட்டார்.
சவூதி தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அல் இத்திஹாட் குழுவிடம் அல் நாசர் குழு 3-1 எனும் கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
பூப்பந்து: உள்ளூர் வீரர்
லோ கியன் இயூ தோல்வி
சிங்கப்பூர்: உள்ளூர் பூப்பந்து வீரர் லோ கியன் இயூ இந்தோனீசிய மாஸ்டர்ஸ் பூப்பந்துப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தோனீசியாவின் சிக்கோ அவ்ரா டுவி வார்டோயோவிடம் 25 வயது லோ 21-18, 21-15 எனும் புள்ளிக் கணக்கில் தோற்றார்.

