ஆடவரைக் காவல்துறையினர் கடுமையாக தாக்குவதைக் காட்டும் காணொளி
மெம்ஃபிஸ்: காவல்துறையினரின் அடக்குமுறை காரணமாக அமெரிக்காவில் டயர் நிக்கல்ஸ் என்ற 29 வயது கறுப்பின இளைஞர் ஒருவர் மாண்ட சம்பவம் தொடர்பிலான காணொளி வெளியானதையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.
சென்ற 7ஆம் தேதி ஐந்து காவல்துறை அதிகாரிகள் நிக்கல்ஸைக் கொடூரமாக தாக்கியதில், படுகாயமடைந்த அவர் 10ஆம் தேதி மாண்டுவிட்டார். இதுதொடர்பாக அதிகாரிகள்மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காவல்துறையினரின் உடையில் அணியும் கேமராவில் பதிவான காணொளிகளை மெம்ஃபிஸ் நகர காவல்துறை வெளியிட்டுள்ளது.
அத்தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து காவல்துறை அதிகாரிகளும் கறுப்பினத்தவர்கள் ஆவர். அவர்கள், சாலை விதிமுறைகளை மீறியதாக பைக்கில் சென்றுகொண்டிருந்த நிக்கோலஸைத் தடுத்து நிறுத்துகின்றனர்.
ஆனால் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறிய நிக்கல்ஸை காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். நிக்கல்சும் அவர்கள் சொல்வதைக் கேட்டு கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கிறார்.
அப்போதும் அதிகாரிகள் நிக்கல்ஸைத் தொடர்ந்து தாக்குகிறார்கள். வலியைப் பொறுக்க முடியாமல் அம்மா, அம்மா என்று நிக்கல்ஸ் கூக்குரலிடும் சத்தம் அக்காணொளியில் கேட்கிறது.
காவல்துறையினரின் வன்முறைக்கு மேலும் ஒருவர் மாண்டிருப்பதைக் காட்டும் இக்காணொளி, அமெரிக்காவின் காவல்துறை கலாசாரம் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
மெம்ஃபிஸ் நகரில் கிட்டத்தட்ட 100 பேர் இண்டர்ஸ்டேட் 55 என்ற பகுதிக்கு அருகில் நிக்கல்ஸின் பெயரை முழக்கமிட்டபடி பேரணி சென்றனர். இதனால் அங்கு போக்குவரத்து தடைபட்டது.
டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறையினரின் வாகனங்களைச் சேதப்படுத்தியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
அட்லாண்டா, சாக்ரமெண்டோ, வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள பூங்கா உள்ளிட்ட மற்ற பகுதியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மூன்று ஆண்டுகளுக்கு முன் ஜார்ஜ் ஃபிளாயிட் கொல்லப்பட்டபோது, அங்கு பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

