சீனாவில் உள்நாட்டு பயணங்கள் 74% அதிகரிப்பு
பெய்ஜிங்: சீனாவில் மூன்று ஆண்டுகளாக நீடித்த கொவிட்-19 விதிமுறைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு உள்நாட்டு பயணங்கள் சென்ற ஆண்டைவிட
74 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சீனப் புத்தாண்டை முன்னிட்ட சென்ற வார விடுமுறை காலத்தில் கிட்டத்தட்ட 226 மில்லியன் உள்நாட்டு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 130 மில்லியனாக இருந்தது.
கிருமிப் பரவலுக்கு முன்பான 2019ஆம் ஆண்டில் மொத்தம் 12.53 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சீன ஊடகம் ஒன்று கூறுகிறது.
இஸ்லாமியர்களின் புனித நூல் அவமதிப்பு; மலேசியாவில் பேரணி
இஸ்தான்புல்: சுவீடனில், முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆப்கானிஸ்தானிலும் மலேசியாவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில், சுவீடன் தூதரகத்தை நோக்கி நூற்றுக்கணக்கானவர்கள் பேரணி சென்றனர். அந்நாட்டின் அரசியல் கட்சி உறுப்பினர்கள் இந்த பேரணியை வழிநடத்திச் சென்றனர்.
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலும் திருக்குரான் அவமதிப்பிற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுவீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைவதைத் துருக்கி அங்கீகரிக்கும் வரை குர்ஆன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சுவீடனைச் சேர்ந்த ராஸ்மஸ் பலுடன் வெள்ளிக்கிழமை அன்று கூறினார்.
'சீனாவுடன் மோதல் ஏற்படக்கூடும்'
வாஷிங்டன்: அமெரிக்க விமானப் படை தளபதி ஒருவர் வரும் 2025ஆம் ஆண்டில் சீனாவுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். அதுவும் தைவான் பிரச்சினை தொடர்பாக அந்த மோதல் நிகழக்கூடும் என்றும் அவர் சொன்னார். எனவே, தனது படைகளை முழுமூச்சுடன் தயாராக இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2024ல் நடைபெறவுள்ள தைவான் தேர்தலை, அங்கு ராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்ளவதற்கான வாய்ப்பாக சீனா பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்று என்று தளபதி மைக் மின்ஹன் சொன்னார்.

