ஆக்லாந்து: நியூசிலாந்தின் ஆக்லாந்தில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அங்கு 24 மணி நேரத்தில் 249 மிமீ மழை பதிவானது. இது அந்த மாநிலத்தின் ஆக அதிக மழை பதிவாகும். 1985ஆம் ஆண்டு அங்கு 161.8 மிமீ மழை பதிவானது.
அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ளவர்களைப் பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல இடங்களில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்தின் முக்கிய பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்ததால், நேற்று பிற்பகல் வரை விமானச் சேவையும் ரத்து செய்யப்பட்டிருந்தது.
வெள்ளநீர் வடிந்த பிறகு வீடுகளுக்குத் திரும்பும் மக்கள் எச்சரிக்கையைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கனமழை குறைந்திருந்தாலும் அங்கு தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நியூசிலந்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் கிரிஸ் ஹிப்கின்ஸ், பாதிக்கப்பட்டோருக்கு உதவ அரசாங்க அமைப்புகள் கடுமையாகப் பாடுபடுவதாய் கூறினார்.
கனமழை காரணமாக குறைந்தது மூன்று பேர் மாண்டுவிட்டதாகவும் ஒருவரைக் காணவில்லை என்றும் அவர் சொன்னார்.

