ஈப்போ: நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆர், 'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தில் இடம்பெறும் 'நான் ஆணையிட்டால்' பாடலில் சொல்வதைப்போல் தலைவர்கள் செயல்பட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தி இருக்கிறார்.
தம்புன் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரான திரு அன்வார், கிளெபாங்கில் நேற்று நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்றபோது அப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்பாடலில் சில வரிகளைப் பாடியபின் பேசத் தொடங்கிய அவர், மக்களையும் அவர்தம் கண்ணீரைத் துடைப்பதையும் தலைவர்கள் மறக்கக்கூடாது என்பதை அந்தப் பாடல் விளக்குவதாகக் குறிப்பிட்டார். தலைவர்களே மக்களுக்கு இடையே சண்டைமூட்டி விடுகின்றனர் என்றும் அதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என்றும் அவர் சொன்னார்.

