அம்னோ நடவடிக்கை குறித்து முன்னாள் பிரதமர் சப்ரி கருத்து
கோலாலம்பூர்: அம்னோ கட்சியில் இருந்து பல்வேறு தலைவர்களை நீக்கியதும் இடைநீக்கம் செய்திருப்பதும் தவறானது என்று அதன் துணைத் தலைவரும் முன்னாள் பிரதமருமான இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.
"சட்டபூர்வமாகப் பார்க்கையில், அந்த ஒழுங்குமுறை நடவடிக்கை சரியானதாக இல்லை. சட்டரீதியிலும் இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு எதிரானதும் என்பதால் கட்சியிலிருந்து நீக்கும், இடைநீக்கம் செய்யும் முடிவிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்," என்று இன்ஸ்டகிராம் வழியாக அவர் கூறியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தற்காக்கும் உரிமை வழங்கப்படவில்லை என்றும் அவர்களது செயல்களுக்கு விளக்கம் கேட்டு அவர்களுக்குக் கடிதம் அனுப்பப்படவில்லை என்றும் திரு சப்ரி சுட்டினார்.
ஒழுங்குமுறை விசாரணைக் குழு அமைப்பதும் கேள்விக்குள்ளான தலைவர்களைத் தற்காத்துப் பேச அனுமதிப்பதுமே சரியான நடைமுறையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"குற்றம் சாட்டப்பட்டோர் தவறிழைத்ததை விசாரணைக் குழு கண்டறிந்தால், அது தனது பரிந்துரைகளை அம்னோ நிர்வாகக் குழுவிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு, இறுதி முடிவு தொடர்பில் கட்சி நிர்வாகக் குழு, அம்னோ உச்ச மன்றத்திடம் தனது பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும்," என்று திரு சப்ரி விளக்கியுள்ளார்.
குறிப்பாக, கட்சித் தலைவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்போது வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவம் குறித்தும் அவர் நினைவூட்டினார்.
அம்னோவில் இருந்து முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் நீக்கப்பட்டுள்ளார்; முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுதீன் ஆறாண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

