மெம்ஃபிஸ்: காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் கறுப்பின ஆடவர் ஒருவர் மாண்டதை அடுத்து, அமெரிக்காவின் மெம்ஃபிஸ் நகர நிபுணத்துவக் காவல்துறைப் பிரிவு கலைக்கப்பட்டது.
இம்மாதம் 7ஆம் தேதி போக்குவரத்து நிறுத்தமொன்றில் டயர் நிக்கல்ஸ் என்ற 29 வயது ஆடவரைக் காவல்துறை அதிகாரிகள் ஐவர் தாக்கினர். அதனால் கடுமையாகக் காயமுற்ற திரு நிக்கல்ஸ், மூன்று நாள்களுக்குப் பிறகு இறந்துவிட்டார்.
திரு நிக்கல்சைக் காவல்துறையினர் தாக்கிய காணொளி வெளியானதை அடுத்து, அமெரிக்காவின் பல நகரங்களிலும் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதனையடுத்து, 'ஸ்கார்ப்பியன்' காவல்துறைப் பிரிவை நிரந்தரமாகக் கலைப்பதாக மெம்ஃபிஸ் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஐவரும் அப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, கறுப்பினத்தைச் சேர்ந்த அந்த ஐந்து அதிகாரிகள் மீதும் கடந்த வியாழனன்று நீதிமன்றத்தில் கொலை, கடத்தல், தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர்கள் ஐவரும் காவல்துறையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டனர்.