டெல் அவிவ்: ஜெருசலமில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்திற்கு வெளியே கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு சிங்கப்பூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
"உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற வாழ்த்துகிறோம்," என்று ஓர் அறிக்கை வழியாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் நெவே யாக்கோவ் குடியேற்றப் பகுதியில் உள்ள அந்த ஆலயத்திற்கு அருகே 21 வயது பாலஸ்தீனியர் ஒருவர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டதில் எழுவர் கொல்லப்பட்டனர்.
மறுநாள் சனிக்கிழமை நிகழ்ந்த இன்னொரு துப்பாக்கிச்சூட்டில் 13 வயது சிறுவன் உயிரிழந்தான்; இருவர் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து, தன் நாட்டு மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதை எளிதாக்கும் நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 'பயங்கரவாதி' களுடைய குடும்பத்தினரின் சில உரிமைகளைப் பறிக்கவும் இஸ்ரேல் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

