ஐந்தாம் சுற்றில் யுனைடெட், ஸ்பர்ஸ்
லண்டன்: எஃப்ஏ கிண்ணக் காற்பந்து நான்காம் சுற்று ஆட்டமொன்றில் பிரேசிலின் கேசமிரோ இரு கோல்களைப் புகுத்த, மான்செஸ்டர் யுனைடெட் குழுவிடம் 3-1 என்ற கோல் கணக்கில் இரண்டாம் நிலைக் குழுவான ரெடிங் வீழ்ந்தது. இன்னொரு பிரேசில் வீரரான ஃபிரெட், யுனைடெட் குழுவின் இன்னொரு கோலைப் போட்டார். இந்த ஆட்டத்தின் முற்பாதியில் பிரிட்டிஷ் வீரர் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் எதிரணியின் வலைக்குள் பந்தை உதைத்த போதும் காணொளி உதவி நடுவர் துணையுடன் 'அது கோலில்லை' என அறிவிக்கப்பட்டது. இல்லையேல், யுனைடெட் சார்பில் தொடர்ந்து பத்து ஆட்டங்களில் கோல் அடித்த முதல் வீரர் எனும் பெருமைக்குரியவராகி இருப்பார் ரேஷ்ஃபர்ட். இன்னோர் ஆட்டத்தில் தென்கொரியாவின் சோன் ஹியூங் மின் இரண்டு கோலடிக்க, டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் 3-0 என்ற கணக்கில் பிரெஸ்டன் நார்த் எண்ட் குழுவை வென்றது.
அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம்: நடாலுடன் இணைந்த ஜோக்கோவிச்
மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டியில் பட்டம் வென்றதன்மூலம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றோரில் ஸ்பெயினின் ரஃபாயல் நடாலுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டார் செர்பிய டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச். இருவரும் தலா 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஜோக்கோவிச் 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் கிரேக்க வீரர் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாசை வீழ்த்தினார். இதனிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் படத்துடன் கூடிய ரஷ்யக் கொடியுடன் காட்சி தந்து, சர்ச்சையில் சிக்கிய ஜோக்கோவிச்சின் தந்தை சர்ஜன் ஜோக்கோவிச், இறுதிப் போட்டியில் தம் மகனின் ஆட்டத்தை நேரில் காண அரங்கிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

