சோல்: தென் கொரியா, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருந்த உட்புறங்களில் முகக்கவசம் அணியும் கட்டுப்பாடுகளை நேற்று தளர்த்தியது.
கடந்த ஏழு மாதங்களாக தொற்றுச்சம்பவங்கள் வெகுவாகக் குறைந்ததால் உட்புறங்களில் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது.
திங்கள் முதல் பள்ளிகள், பாலர் பள்ளிகள், உடலுறுதிக் கூடங்கள் போன்ற இடங்களுக்கு மக்கள் முகக்கவசம் அணியாமல் செல்லலாம். இந்தக் கட்டுப்பாடு 2020 அக்டோபர் முதல் அமலில் இருந்தது.
இருந்தாலும் மருத்துவமனைகள், மருந்து விற்பனைக் கடைகள், பொதுப் போக்குவரத்து போன்ற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கொரிய நோய்க்கட்டுப்பாட்டு, தடுப்பு முகவை தெரிவித்தது.
தற்போது கிருமிப் பரவலை நன்கு நிர்வகிக்கக்கூடிய சூழ் நிலையில் கொரியா உள்ளது.
புதிய தொற்றுச் சம்பவங் களின் எண்ணிக்கை குறைந்துள்ளன. கடுமையாக நோய்வாய்ப்பட்ட சம்பவங்களும் மரணச் சம்பவங்களும் குறைந்துள்ளன என்று முகவை கூறியது.
நேற்று மொத்தம் 7,416 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. இவற்றில் வெளிநாட்டில் இருந்து வந்த 22 நோயாளிகளும் அடங்குவர். இவர்களுடன் சேர்த்து மொத்த தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 30,157,017க்கு அதிகரித்துள்ளதாக முகவை குறிப்பிட்டது.
2022 ஜூலை 4ஆம் தேதி பதிவான தொற்றுச் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது ஆகக் குறைவு என்று அது கூறியது.
திங்களன்று தொற்றால் பாதிக்கப்பட்ட 30 பேர் மரண மடைந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 33,420க்கு அதிகரித்துள்ளது. கிருமித்தொற்றால் மோசமான உடல்நிலையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் முந் தைய நாள் பதிவான 420வுடன் ஒப்பிடுகையில் 402க்கு குறைந்துள்ளது என்று முகவை கூறியது.

