விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
2a351924-8864-44ab-9795-b8a0ae29f80f
இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணத்தின் சென்ற காற்பந்து வெற்றியாளர்களான லிவர்பூல் நேற்று முன்தினம் நடந்த எஃப்ஏ கிண்ண தகுதிச் சுற்று போட்டியில் பிரைட்டன் குழுவிடம் தோல்வியைத் தழுவியது. படம்: ஏஎஃப்பி -

எஃப்ஏ கிண்ணப் போட்டி:

வெளியேறியது லிவர்பூல்

லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணத்தின் சென்ற காற்பந்து வெற்றியாளர்களான லிவர்பூல் நேற்று முன்தினம் நடந்த எஃப்ஏ கிண்ண தகுதிச் சுற்று போட்டியில் பிரைட்டன் குழுவிடம் தோல்வியைத் தழுவியது. ஆட்டத்தின் 90வது நிமிடம் வரை 1-1 என்ற சமநிலையில் இருந்த போட்டியில் பிரைட்டனின் கவுரு மிட்டடோமா என்ற வீரர் கூடுதல் நேரத்தில் அடித்த கோலால் லிவர்பூல் தோல்வியடைந்தது.

ஏறக்குறைய 15 நாட்களுக்கு முன்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் ஒன்றிலும் பிரைட்டன் லிவர்பூலை 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்கடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஆட்டத்தின் முடிவை லிவர்பூல் நிர்வாகி யகர்ன் கிளோப் தமது பயிற்சித் தலைமையின்கீழ் லிவர்பூல் சந்தித்த மிக மோசமான தோல்வி என்று வர்ணித்திருந்தார்.

வரலாறு படைத்த இந்திய

கிரிக்கெட் வீராங்கனைகள்

பெண்களுக்கான முதல் 19 வயதுக்குட்பட்ட ஜூனியர் 'டி20' உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளனர். சென்ற ஞாயிற்றுக்கிழமை தென்னாப் பிரிக்காவில் போட்செஃப்ட்ருமில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. பூவா, தலையாவில் வெற்றி பெற்ற இந்திய பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. ஆனால் இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. இந்த வெற்றியை பாராட்டியுள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் ரொக்கப் பரிசுகளை அறிவித்துள்ளது.