டார்பியை வீழ்த்தியது வெஸ்ட் ஹாம், காத்திருக்கிறது யுனைடெட்
லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ண காற்பந்துப் போட்டியின் நான்காம் சுற்று ஆட்டத்தில் டார்பி கவுன்டியை 2-0 எனும் கோல் கணக்கில் வெஸ்ட் ஹாம் வீழ்த்தியது. இதையடுத்து, ஐந்தாம் சுற்று ஆட்டத்தில் அது மான்செஸ்டர் யுனைடெட் குழுவைச் சந்திக்கிறது.
ஜெரோட் போவன், மிக்கேல் அண்டோனியோ ஆகியோர் போட்ட கோல்கள் வெஸ்ட் ஹாம் குழுவை வெற்றியின் பாதையில் கொண்டு சென்றது.
இந்திய ஹாக்கி அணி பயிற்றுவிப்பாளர் பதவி விலகல்
புதுடெல்லி: உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்தது. 16 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணி பெனால்டி முறைப்படி நடப்பு வெற்றியாளரான பெல்ஜியம் அணியை வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இப்போட்டியில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம்பெற்றிருந்தது. அப்பிரிவில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி நேரடியாக காலிறுதிக்கு சென்றது. இந்திய அணி 'கிராஸ் ஓவர்' சுற்றில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது.
அதன் பிறகு, நடைபெற்ற தரநிலை ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்திய அணி ஒன்பதாவது இடத்தை பிடித்தது. இந்நிலையில், இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து கிரஹாம் ரெய்ட் விலகியுள்ளார். அவருடன் உதவிப் பயிற்றுவிப்பாளர் கிரேக் கிளார்க், குழுவின் ஆலோசகர் மிட்ச்செல் டேவிட் ஆகியோரும் பதவி விலகியுள்ளனர்.

