கோலாலம்பூர்: மலேசியாவின் ஆகப் பழமையான கட்சியான அம்னோ அண்மையில் சில முக்கிய அரசியல்வாதிகளைப் பதவி நீக்கம், இடைநீக்கம் செய்தது.
இந்நிலையில், அம்னோவின் கட்சித் தேர்தல் வரும் மார்ச் மாதம் 18ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது.
தேர்தல் நெருங்குகையில், கட்சியின் உதவித் தலைவர்
பதவிகளுக்குக் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் நடைபெற்ற அம்னோ பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்படாது என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதன் விளைவாக, கட்சித் தலைவராக அகமது ஸாஹிட் ஹமிடியும் துணைத் தலைவராக முகம்மது ஹசானும் நீடிப்பர்.
கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ தோல்வி அடைந்த
போதிலும் ஆளும் கூட்டணியில் இடம்பெறுள்ளது.
தமது தேர்தல் வியூகம் சரியானதே என்று இன்றும் திரு ஸாஹிட் கூறி வருகிறார். தொடர்ந்து கட்சித் தலைவராக இருந்து அடுத்த பொதுத் தேர்தலில் இளம் வாக்காளர்களை ஈர்க்கப்போவதாக அவர் சூளுரைத்துள்ளார்.
இதற்கிடையே, மூன்று உதவித் தலைவர் பதவிகளுக்குக் குறைந்தது ஏழு பேர் போட்டி
யிடக்கூடும் என்று நம்பப்படுகிறது. அவர்களில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர்கள் டாக்டர் ஸாம்பிரி அப்துல் காதர், திருவாட்டி அஸாலினா ஓத்மான் சயீது, திரு ஜொஹாரி அப்துல் கனி ஆகியோர் அடங்குவர்.
டாக்டர் ஸாம்பிரி மலேசியாவின் தற்போதைய வெளியுறவு அமைச்சர்.
திருவாட்டி அஸாலினா சட்ட, அமைப்பு ரீதியான சீர்திருத்த அமைச்சராவார்.
இவர்களுடன் உதவித் தலைவர் பதவிக்குத் தற்போது அப்
பதவியை வகிக்கும் திரு முகம்மது காலித் நூர்தீன், அம்னோ இளையர் அணித் தலைவர் அஸிரஃப் வஜ்டி டுசுக்கி, முன்னாள் ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகம்மது, சாபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ராடின் ஆகியோரும் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

