பெய்ஜிங்: அமெரிக்காவின் முக்கிய ராணுவப் பகுதிகளில் சீனாவின் பலூன் பறந்து உளவு பார்த்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்த நிலையில், சீனா அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது அமெரிக்க இறையாண்மைக்கு எதிரான திட்டமிட்ட தெளிவான அத்துமீறல் என்று சீனாவிற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மான்டனா மாநிலத்தில் கண்டறியப்பட்ட இந்த உளவு பலூனால், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனின் சீன சுற்றுப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
பென்டகன் செய்தித் தொடர்பாளர் ரைடர் இதுகுறித்து அளித்த பேட்டியில், "சீன உளவு பலூன்
18 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தில் அமெரிக்காவின் மத்தியப் பகுதியின் உயரே இருக்கிறது. இது இன்னும் ஓரிரு நாள் இங்கேயே சுற்றித் திரியலாம். உளவு நோக்கத்தில்தான் இந்த பலூன் வந்து உள்ளது," என்றார்.
ஆனால், அது உளவு பலூன் அல்ல வானிலை ஆய்வுக்காக தாங்கள் அனுப்பிய அந்த பலூன் தவறுதலாக திசை மாறி அமெரிக்க வான்வெளிக்குள் சென்றுவிட்டது என்று சீன வெளியுறவு அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
மேலும் இந்த விஷயத்தைப் பயன்படுத்தி, அமெரிக்க அரசியல்வாதிகளும் ஊடகங்களும் ஆதாயம் தேட முயலுகின்றன என்றும் அது சொன்னது.
தற்செயலாக நடந்த இச்சம்பவம் குறித்து இருதரப்பின் உயர்மட்ட அரசதந்திரிகளும் வெள்ளிக்கிழமையன்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அது கூறியது.
அதுபோல், நிலைமை சீரடைந்தததும் பிளிங்கன் சீனா செல்வார் என்று அமெரிக்காவும் கூறியுள்ளது.
இருநாட்டு அரசாங்கங்களும் இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்பதை இவை காட்டுவதாக கருதப்படுகிறது.
அத்துடன் சீனாவும் தனது தரப்பில் தவறுதலாக நடந்த விஷயத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளதும் அரிதான ஒன்றாகும்.
இதற்கிடையே, அமெரிக்காவின் வான்பரப்பில் மிகவும் உயரத்தில் பறந்த அமெரிக்காவின் ஆய்வு பலூனை இணையவாசிகள் பலரும் சீனாவின் உளவு பலூன் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டதாக FlightRadar24 இணையத்தளம் தெரிவித்தது.

