பேங்காக்: காற்று மாசுபாடு மோசமடைந்துள்ளதால் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் பள்ளிக்கூடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
வெள்ளிக்கிழமையன்று பேங்காக், அதனைச் சுற்றிய 43 பகுதிகளிலும் புகைமூட்டம் சூழ்ந்திருந்ததாக பேங்காக் போஸ்ட் தகவல் கூறுகிறது.
பிஎம்2.5 அளவில் காற்று தூய்மைக்கேடு குறியீடு ஒரு கன மீட்டருக்கு 54 முதல் 119 மைக்ரோ
கிராமாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமையன்று அங்கு பள்ளிக்கூடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
மாணவர்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால் விடுமுறை அறிவித்துள்ளதாக பதுவமான் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்று சொன்னது.
வெள்ளிக்கிழமையன்று விடுமுறை அறிவித்திருந்த நவ் யாவ் மாவட்ட பள்ளிக்கூடம் ஒன்று திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்று கூறியுள்ளது.
காற்றின் தரத்தைக் கண்காணிப்பதற்காக கல்வி அமைச்சு, பல்வேறு இடங்களில் ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்துள்ளது.
காற்று மாசுபாடு காரணமாக ஏற்பட்ட சில வகையான உடல்நலக் கோளாறுகளால் இந்த வாரம் மட்டும் 376,165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்ற வாரம் இது 163,000ஆக இருந்தது.
அண்மையில் பாதிக்கப்பட்டவர் களில் 165,000 பேர் சுவாசப் பிரச்சினைகளுக்கு ஆளாகியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
IQAir.com என்ற இணையத்தளத் தரவு அடிப்படையில், சென்ற வியாழனன்று காலை 9 மணி நிலவரப்படி, பேங்காக்கின் காற்றுத் தரக் குறியீடு 198ஆக இருந்தது. எனவே, காற்று மாசுபாடு மோசமாக உள்ள மூன்றாவது நகரமானது பேங்காக்.
இந்தியாவின் மும்பை நகர காற்றுத் தரக் குறியீடு 207ஆகவும் பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் இது 202ஆக உள்ளதாகவும் தாய்லாந்து நாளிதழான தி நேஷன் தெரிவித்துள்ளது.