பெட்டாலிங் ஜெயா: நாடாளு மன்றத்தில் தரக்குறைவாகப் பேசும் உறுப்பினர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் (S$307) அபராதம் விதிக்கப்படும் என்று மலேசிய நாடாளுமன்ற கீழவை நாயகர் ஜோஹாரி அப்துல் அறிவித்துள்ளார்.
"சில உறுப்பினர்கள் இனவாதம், பாலியல் தொடர்பாக தரக்குறைவாகப் பேசுகின்றனர். சபாநாயகர், துணை சபாநாயகர், இதர நாடாளுமன்ற உறுப்பினர்களை குறிவைத்து அவதூறாகப் பேசும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெட்கமின்றி தகாத சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
"இதனைக் கருத்தில் கொண்டு சில நாடாளுமன்ற சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படு கின்றன," என்று திரு ஜோஹாரி அப்துல் சொன்னார்.
"நாடாளுமன்றத்தில் உறுப் பினர்களின் நடத்தையைக் கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்படும்.
"அதன் வழி வழிகாட்டி நெறிமுறைகள் உருவாக்கப்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.
"உறுப்பினர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க ஏற்கெனவே (சலுகைகள், அதிகாரங்கள்) சட்டம் 1952ல் உள்ளது. ஆனால் இது ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை.
"இந்தச் சட்டத்தை மீறுவோரை ஆறு மாதத்திற்கு இடைநீக்கம் செய்ய முடியும்.
"இருந்தாலும் இதற்கு முன்பு இருந்த நாடாளுமன்ற நாயகர்கள் இதனை அரிதாகவே பயன்படுத்தியிருக்கின்றனர்," என்று மலாய் நாளிதழான பெரித்தா ஹரியானிடம் அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து மேலவை நாயகர் ரயிஸ் யதிமுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

