விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
8b22af0d-692c-4db4-baf4-690c9bbe41bd
-

சிங்கப்பூரில் உலக நீர்விளையாட்டுப் போட்டிகள்

சிங்கப்பூர்: உலக நீர்விளையாட்டுப் போட்டிகள் 2025 சிங்கப்பூரில் நடைபெறுகிறது. உலகப் பிரசித்திபெற்ற விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்தக்கூடிய நாடு என்று சிங்கப்பூர் கொண்டுள்ள நற்பெயரை இது மெருகூட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீச்சல், முக்குளித்தல், வாட்டர் போலோ போன்ற நீர்விளையாட்டுகளைக் கொண்ட உலக நீர்விளையாட்டுப் போட்டிகளை நேரில் காண சிங்கப்பூரர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்போட்டியை ஏற்று நடத்தும் முதல் தென்கிழக்கு ஆசிய நாடு எனும் பெருமை சிங்கப்பூரைச் சேரும்.

இந்தப் போட்டி ரஷ்யாவில் நடைபெற இருந்தது. ஆனால் உக்ரேனுக்கு எதிராக அது போர் தொடுத்துள்ளதால் போட்டியை ஏற்று நடத்தும் உரிமை அதனிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.

மேன்யூ-லீட்ஸ் சமநிலை;

டென் ஹாக் கோபம்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவும் லீட்ஸ் யுனைடெட் குழுவும் தரப்புக்கு இரண்டு கோல்களைப் போட்டு சமநிலை கண்டன.

நிர்வாகி இல்லாமல் களமிறங்கிய லீட்ஸ், ஒரு கட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இருப்பினும், மனந்தளராமல் போராடிய மேன்யூ ஆட்டத்தைச் சமன்செய்தது. தொடர்ந்து பல ஆட்டங்களில் லீட்ஸ் தோல்வி அடைந்ததால் அதன் நிர்வாகியாக இருந்த ஜெசி மார்ஷ் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், மேன்யூவின் ஆட்டம் அதன் நிர்வாகி டென் ஹாக்கிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்தில் மேன்யூ சோபிக்கவில்லை என்றார் அவர். இதனால் வெற்றி வாய்ப்பை அது நழுவவிட்டதாக அவர் கூறினார்.

'கிளப்' உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் ரியால் மட்ரிட்

ரபாட்: 'கிளப்' உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஸ்பானிய லீக் ஜாம்பவான் ரியால் மட்ரிட் தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் அது எகிப்தின் அல் ஆலி குழுவை 4-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.

ஆட்டத்தைக் கைப்பற்றியபோதும் ரியால் மெத்தனத்துடன் இருந்ததாக அதன் பயிற்றுவிப்பாளர் கார்லோ அன்சிலோட்டி கடிந்துகொண்டார்.