பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின்பிங் மாபெரும் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் கூறிய கருத்துகள் மிகவும் பொறுப்பற்ற செயலாகும் என்று சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
அனைத்துலக வர்த்தகத்தை சீனா அதிகம் சார்ந்திருப்பதால் அமெரிக்காவை முழுமையாக எதிர்க்க முடியாத நிலை அதற்கு ஏற்பட்டுள்ளதாக 'பிபிஎஸ் நியூஸ்
அவர்' செய்தி நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் அதிபர் பைடன் பேட்டியளித்தபோது கூறியிருந்தார். அதிபர் ஸி பல கடுமையான சவால்களை எதிர்நோக்குவதாகவும் அவரது நிலையில் இருக்க தமக்கு விருப்பமில்லை என்றும் அதிபர் பைடன் தெரிவித்தார்.
இதற்கு சீனா நேற்று கண்டனக் குரல் எழுப்பியது. அதிபர் பைடன் தெரிவித்த கருத்துகள் சீனாவுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு கூறியது.
அமெரிக்க அதிபரின் இத்தகைய செயல்பாடு அடிப்படை அரசதந்திரக் கொள்கைகளுக்கு முரணானது என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்
தொடர்பாளர் மாவ் நிங் கூறினார். அதிபர் பைடன் கூறிய கருத்துகளை சீனா திட்டவட்டமாக எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார். அண்மையில் அமெரிக்க வான்வெளியில் பலூன் மூலம் சீனா வேவு பார்த்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. அந்த பலூன் தன்னுடைய வானிலை கண்காணிப்புச் சாதனம் என்றும் அது நிர்ணயிக்கப்பட்ட திசையிலிருந்து விலகி அமெரிக்க வான்வெளிக்குள் நுழைந்ததாக சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்த பலூனைச் சுட்டு வீழ்த்த எடுக்கப்பட்ட முடிவை பேட்டியின்போது அதிபர் பைடன் தற்காத்துப் பேசினார். அத்துடன், சீனாவுடன் மோத அமெரிக்கா விரும்பவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

