விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

2 mins read
697cc3ca-d3b9-4342-9f31-a9dd47d87a0f
-

135 டென்னிஸ் ஆட்டங்களில்

முறைகேடு; வீரருக்குத் தடை

க்டான்ஸ்க் (போலந்து): டென்னிஸ் ஆட்டங்களின் முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயிக்கும் நடவடிக்கையை மேற்கொண்ட முன்னாள் விளையாட்டாளருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மொரோக்கோவைச் சேர்ந்த யூனஸ் ரச்சீடி என்பவர் 135 ஆட்டங்களின் முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயித்த குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் இத்தனை ஆட்டங்களின் முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது இதுவே முதல்முறை என்று 'ஐடிஐஏ' எனும் அனைத்துலக டென்னிஸ் நம்பகத்தன்மை அமைப்பு தெரிவித்தது.

36 வயது ரச்சீடி, அல்ஜீரியாவைச் சேர்ந்த இரண்டு விளையாட்டாளர்களுடன் இந்நடவடிக்கையை மேற்கொண்டார். அந்த இரு அல்ஜீரிய விளையாட்டாளர்கள்மீதும் அண்மையில் தடை விதிக்கப்பட்டது.

ஒரு மாதத்தில் $2 பி. செலவழித்த காற்பந்துக் குழுக்கள்

பாரிஸ்: உலகளவில் காற்பந்துக் குழுக்கள் புதிய விளையாட்டாளர்களை வாங்க சென்ற மாதம் மட்டும் மொத்தமாக 1.57 பில்லியன் டாலருக்கும் (இரண்டு பில்லியன் வெள்ளி) மேல் செலவுழித்துள்ளன. அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

ஜனவரி மாதத்தில் புதிய விளையாட்டாளர்களை வாங்க இதுவரை இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டதில்லை.

இதே காலகட்டத்தில் சென்ற ஆண்டு பதிவானதில் கிட்டத்தட்ட இரு மடங்கு தொகை இவ்வாண்டு செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுக்கள் அதிகம் செலவுசெய்தது இதற்கு முக்கியக் காரணம்.

மொத்தம் செலவான தொகையில் 57.3 விழுக்காட்டை இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுக்கள் செலவு செய்தன. செல்சி மட்டுமே 320 மில்லியன் பவுண்ட் (500 மில்லியன் வெள்ளி) தொகையைச் செலவிட்டு எட்டு புதிய விளையாட்டாளர்களைக் களமிறக்கியது.

சதமடித்த சாதனை வீரர் சர்மா

நாக்பூர்: ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ரோகித் சர்மா (படம்). மேலும், உலக கிரிக்கெட்டில் பந்தடிப்பாளராகவும் அணித் தலைவராகவும் இருந்து இந்தச் சாதனையைப் புரிந்த நான்காவது வீரராகத் திகழ்கிறார் சர்மா.

நாக்பூரில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் போட்டியிடும் டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தின் இரண்டாம் நாளில் சர்மா 120 ஓட்டங்களை எடுத்து அசத்தினார்.

ஆஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களை எடுத்திருந்தது. இந்தியா அதன் முதல் இன்னிங்சில் இதுவரை ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 321 ஓட்டங்களைக் குவித்தது.

மூன்று விக்கெட்டுகள் எஞ்சியுள்ள நிலையில் 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளது இந்தியா.

ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக 66 ஓட்டங்களைக் குவித்தார் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா.