அதுன்கியா: துருக்கியின் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து பிறந்து பத்து நாள்களே ஆன பச்சிளங்குழந்தையையும் அதன் தாயையும் நான்கு நாள்களுக்குப் பிறகு மீட்புப் பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர்.
அந்நாட்டின் ஹத்தே மாநிலத்தில் காப்பாற்றப்பட்ட அந்த ஆண் குழந்தையையும் சோர்வடைந்த நிலையில் சற்று சுயநினைவுடன் இருந்த அதன் தாயையும் மீட்புக் குழுவினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதே போல், மற்ற பகுதிகளில் இருந்து 70 வயது மூதாட்டி ஒருவரும் 55 வயது பெண் ஒருவரும் கிட்டத்தட்ட 122 மணி நேரத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
துருக்கி, சிரியாவில் சென்ற திங்கட்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 25,000ஐ எட்டு கிறது.
கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டிருந்தாலும் மோசமான வானிலை, உறைய வைக்கும் குளிர், அடுத்தடுத்த நில அதிர்வுகள் ஆகியவை மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருந்து வருகின்றன.
ஐந்து நாள்கள் ஆகிவிட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயர்பிழைத்திருப்பதற்கான வாய்ப்புக் குறைவு என்றும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 31,000 பேர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக துருக்கியின் துணை அதிபர் ஒக்டே சொன்னார்.
நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த 1.05 மில்லியன் மக்கள் தற்காலிக புகலிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கிட்டத்தட்ட 80,000 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.
"ஓர் ஆண்டிற்குள் மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தந்து அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதி செய்வதே எங்களின் முக்கிய குறிக்கோள்," என்று ஒக்டே கூறினார்.
இருப்பினும் நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்கள் தொடர்ந்து பீதியில் உறைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணரப்பட்ட 1,600க்கும் அதிகமான நில அதிர்வுகள் அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
"இடிந்து போன கட்டடங்களையும் உயிரற்ற உடல்களையும் பார்க்கும்போது, என் நிலைமை நாளை என்னவாக இருக்கும் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடிய வில்லை," என்றார் உயிர் தப்பிய பெண் ஒருவர். தனது குடும்பத்தைச் சேர்ந்த 60 பேரை நிலநடுக்கத்தில் இழந்துவிட்டதாகவும் அவர் சொன்னார்.

