செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
65e92232-c98a-4e0c-9d17-33927e23471e
-

ராணுவ வீரரின் வெறிச்செயல்; சக வீரர்கள் நால்வர் சுட்டுக்கொலை

மணிலா: ராணுவ வீரர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த சக ராணுவ வீரர்கள்மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் மாண்டுவிட்டனர். ஒருவர் கடுமையாக காயமடைந்தார். வடக்கு மிண்டானோவில் உள்ள ராணுவ முகாமில் இந்த வெறிச்செயல் நடந்ததாகவும் அச்செயலில் ஈடுபட்டவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிலிப்பீன்ஸ் ராணுவம் சொன்னது. நால்வரைச் சுட்டுக்கொன்ற பிறகு, மற்றொரு அறைக்குள் செல்ல முயன்ற அவரை மற்றவர்கள் தடுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ராணுவம் கூறியுள்ளது.

முன்னாள் நெஸ்லே நிர்வாகிக்கு 2.8 மில்லியன் இழப்பீடு

லாசஞ்சே: பகடிவதை செய்யப்பட்டு நிறுவனத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட முன்னாள் நிர்வாகிக்கு சுவிட்சர்லாந்து நெஸ்லே நிறுவனம் 2 மில்லியன் சுவிஸ் ஃபிராங்க்

(2.8 மில்லியன் வெள்ளி) வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு முதல் தாம் அடாவடிச் செயலுக்கு ஆளானதாகவும் தொழில்சார் ஊனமுற்றோர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பம் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் யஸ்மின் என்ற அப்பெண் வழக்கு தொடுத்தார். 2010ல் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு ஒன்பது ஆண்டு சம்பளத்துடன் இழப்பீடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் பத்திரமாக தரையிறங்கியது

மிரி: தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மிரி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

கோலாலம்பூரில் இருந்து MH2574 விமானம் 101 பேருடன் மிரிக்குச் சென்று கொண்டிருந்தது. காலை 11.10 மணிக்குத் தரையிறங்க வேண்டிய விமானம் 11.44 மணிக்குத் தரையிறங்கியது.