தைப்பே: தங்களின் பாதுகாப்பிற்கு மிரட்டல் விடுக்கும் பொருள்களாக அடையாளம் காணப்பட்டால் சீனாவின் பலூன்களை சுட்டு வீழ்த்த தங்களுக்கு உரிமை உண்டு என்று தைவான் ராணுவம் தெரிவித்துள்ளது. பல வேளைகளில் தைவானுக்கு மேல் அத்தகைய பொருள்கள் பறந்துகொண்டிருந்ததை வெளிப்படுத்தி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து தைவான் அவ்வாறு கூறியது.
முன்னதாக கனடாவின் ஹியூரான் ஏரிக்கு மேல் ஆகாயத்தில் காணப்பட்ட அடையாளம் காணப்படாத பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. கடந்த சில நாள்களில் நான்காவது முறையாக இத்தகைய பொருளை அமெரிக்கா சுட்டது.
இம்மாதம் நான்காம் தேதியன்று சீனாவின் வேவு பார்க்கும் பலூனாகக் கருதப்படும் பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. அதற்குப் பிறகு அமெரிக்கா சுட்ட மூன்று பொருள்களைப் பற்றி தங்களிடம் தகவல் இல்லை என்று சீனா சொன்னது.

