விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

2 mins read
6e97f8ba-cae8-4da3-a950-012f32d31429
-

பெண்கள் டி20 உலகக் கிண்ணம்: இந்தியா, இலங்கை வெற்றி

கேப் டவுன்: பெண்கள் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றுள்ளது இந்தியா.

இந்த 'பி' பிரிவு ஆட்டத்தில் முதலில் பந்தடித்த பாகிஸ்தான் நான்கு விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து வெற்றிபெற 150 ஓட்டங்களை எடுக்கவேண்டியிருந்த இந்தியா 19 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களை எடுத்தது.

38 பந்துகளில் 53 ஓட்டங்களைக் குவித்தார் இந்தியாவின் ஜெமீமா ரோட்ரிகெஸ்.

'ஏ' பிரிவில் பங்ளாதேஷுக்கு எதிரான ஆட்டத்தில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இலங்கை.

முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் எட்டு விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்களை எடுத்தது. அதற்குப் பிறகு இலங்கை 18.2 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தில் வென்றது.

விறுவிறுப்பான சூழலை உருவாக்கிய சிட்டி

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் ஆஸ்டன் வில்லாவை வென்று லீக் கிண்ணத்துக்கானப் போட்டியை சூடுபிடிக்கச் செய்துள்ளது மான்செஸ்டர் சிட்டி.

லீக்கின் நடப்பு வெற்றியாளரான சிட்டி, வில்லாவை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது. லீக் பட்டியலில் முதலிடம் வகிக்கும் ஆர்சனல் முன்னதாக பிரென்ட்ஃபர்டுக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது.

இதைத் தொடர்ந்து பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள சிட்டியுடன் ஆர்சனல் நாளை மோதுகிறது. ஆட்டத்தில் வெல்லும் குழுவிற்கு லீக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இரு குழுக்களுக்கும் இடையே மூன்று புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. லீக்கில் ஆர்சனலைவிட சிட்டி கூடுதலாக ஓர் ஆட்டம் விளையாடியுள்ளது.

மகிழ்ச்சி வெள்ளத்தில் யுனைடெட்

லீட்ஸ்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் லீட்ஸ் யுனைடெட்டை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது மான்செஸ்டர் யுனைடெட். இரு அணிகளும் சில நாள்களுக்கு முன்புதான் யுனைடெட்டின் சொந்த மண்ணான ஓல்ட் டிராஃபர்ட் விளையாட்டரங்கில் மோதின. அந்த ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இந்த ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடைசி 10 நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டது யுனைடெட்.

மார்க்கர்ஸ் ரேஷ்ஃபர்ட், அலெஹாண்டிரோ கர்னாச்சோ ஆகியோர் கோல்களைப் போட்டனர்.

லீக் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது யுனைடெட். இரண்டாம் இடத்தை வகிக்கும் மான்செஸ்டர் சிட்டிக்கும் யுனைடெட்டுக்கும் இரண்டு புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. முதலிடத்தில் உள்ள ஆர்சனல் யுனைடெட்டைவிட ஐந்து புள்ளிகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.

இந்நிலையில் பலரும் எதிர்பாரா விதமாக லீக் கிண்ணத்துக்கான போட்டியில் யுனைடெட் இடம்பெற்றுள்ளது.

எனினும், ஆர்சனலைவிட யுனைடெட் கூடுதலாக இரு ஆட்டங்களில் ஆடியுள்ளது.