மெஸ்ஸி, நெய்மார் பிஎஸ்ஜியிலிருந்து வெளியேறக்கூடும்
பாரிஸ்: பிரான்சின் பிஎஸ்ஜி காற்பந்துக் குழுவிலிருந்து அர்ஜென்டினா நட்சத்திரம் லயனல் மெஸ்ஸியும் பிரேசிலிய வீரர் நெய்மாரும் வெளியேறக்கூடும் என்று கூறப்படுகிறது. நெய்மாருக்கும் பிஎஸ்ஜியின் விளையாட்டு இயக்குநர் லூயிஸ் கெம்போஸுக்கும் தகராறு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்த விவரம் வெளிவந்துள்ளது.
மெஸ்ஸி பிஎஸ்ஜியில் இருக்க வகைசெய்யும் ஒப்பந்தம் இந்தக் காற்பந்துப் பருவத்தின் இறுதியில் நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து அவர் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
மெஸ்ஸியைத் தொடர்ந்து பிஎஸ்ஜியில் இருக்கவைக்க பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்தது. எனினும், பேச்சுவார்த்தை இதுவரை வெற்றிகரமாகப் போகவில்லை.
கடந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை அர்ஜென்டினா வென்ற பிறகு மெஸ்ஸி அமெரிக்காவின் இன்டர் மயாமி குழுவில் சேரக்கூடும் என்றும் சொல்லப்பட்டது.
ஆசிய விளையாட்டுகளில் பங்கேற்க ரஷ்ய வீரர்களுக்கு அழைப்பு
ஜனீவா: இவ்வாண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுகளில் பங்கேற்க ரஷ்யாவின் சீருடற்பயிற்சி வீரர்களுக்கும் மல்யுத்த வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவுள்ள 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளில் ரஷ்ய விளையாட்டாளர்கள் பங்கேற்பதற்கு வழிவகுக்கக்கூடும்.
உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய கண்டத்துக்கான ஒலிம்பிக் தகுதிச் சுற்றுகளில் பங்கேற்க ரஷ்ய, பெலரூஸ் விளையாட்டாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், ஆசிய கண்டத்துக்கான தகுதிச் சுற்றுகளின் வாயிலாக அவர்கள் அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படலாம் என்று அனைத்துலக ஒலிம்பிக் குழுமத்தின் தலைவர் தாமஸ் பாக் முன்னதாகக் கூறியிருந்தார்.
லிவர்பூலின் சரிவுக்கு முற்றுப்புள்ளி
லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் எவர்ட்டனை 2-0 எனும் கோல் கணக்கில் வென்று தனது தொடர் சரிவை நிறுத்திக்கொண்டது லிவர்பூல். முகம்மது சாலா (படம்), கொடி காக்போ ஆகியோர் லிவர்பூலின் கோல்களைப் போட்டனர்.
பரம வைரிகளான எவர்ட்டனை வென்று தங்களுக்குப் புத்துயிர் தந்துகொண்டது லிவர்பூலுக்கு சற்று நிம்மதி அளித்திருக்கும்.
மேலும், புதிதாக குழுவில் சேர்ந்த நெதர்லாந்து வீரரான காக்போ சிறப்பாக ஆட சிரமப்பட்டு வந்தார். ஆட்டத்தில் காக்போவின் கோல் அவரின் தன்னம்பிக்கையை மீட்க உதவக்கூடும்.

