பெந்தோங்: மலேசியாவின் பாகாங் மாநிலம், பெந்தோங்கில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரையிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு பெரிய மலைப்பாம்புகள் (படம்) வெளியேற்றப்பட்டன.
இனச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்த அந்த மலைப்பாம்புகளை மீட்டு அவற்றைப் பிரிக்க ஏழு அவசரகாலப் பணியாளர்கள் கொண்ட குழு தேவைப்பட்டது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தம் வீட்டின் மேற்கூரையிலிருந்து பலத்த சத்தம் கேட்டதாக திருவாட்டி சோம் முகம்மது சாலே கூறினார்.
மேற்கூரையில் குரங்குகள் ஓடுவதாக அவர் சந்தேகித்தார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை, தம் படுக்கை அறையின் கூரையில் வெடிப்புகள் தென்பட்டதை திருவாட்டி சோமின் மகள் கவனித்தார்.
அந்த வெடிப்பு பெரிதாக, மலைப்பாம்பின் வால் தென்பட்டது. அதையடுத்து உதவி கோரி உள்ளூர் அவசரகாலக் குழுவினரை திருவாட்டி சோ அழைத்தார்.