கோலாலம்பூர்: பெர்சத்துக் கட்சி 300 மில்லியன் ரிங்கிட்டுக்கு (S$92 மி.) மேல் 'அரசியல் நிதி' பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசினுக்கு அழைப்பாணை விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்ததாரர்களிடமிருந்து திரு முகைதீனின் அரசாங்கத்திற்கு அந்த நிதி வழங்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. திரு முகைதீனின் ஆட்சியின்கீழ், அந்த ஒப்பந்ததாரர்களுக்கு அரசாங்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருந்ததாக 'தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நேற்று முன்தினம் தெரிவித்தது.
ஊழல் தடுப்பு ஆணையத்தைச் சேர்ந்த ஒருதரப்பு கூறியதை மேற்கோள்காட்டிய அச்செய்தி நிறுவனம், திரு முகைதீனுக்கு விரைவில் அழைப்பாணை விடுக்கப்படும் என்று சொன்னது.
பெர்சத்துக் கட்சிக்குச் சொந்தமான இரு வங்கிக் கணக்குகள் கடந்த ஜனவரியில் ஆணையத்தால் முடக்கப்பட்டன என நம்பப்படுகிறது. அக்கணக்குகளில் மொத்தம் 40 மில்லியன் ரிங்கிட் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
பெர்சத்துவின் பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவுசெய்ய அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாக தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிக்கை குறிப்பிட்டது.
பெர்சத்துவின் கணக்குகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த ஒப்பந்ததாரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.