பேங்காக்: தாய்லாந்துக் குகையிலிருந்து 2018ல் மீட்கப்பட்ட 12 சிறுவர்களில் ஒருவர் பிரிட்டனில் மரணமடைந்தார்.
காற்பந்துக் குழுவைச் சேர்ந்த அச்சிறுவர்கள், வடதாய்லாந்தில் உள்ள அந்தக் குகையில் இரண்டு வாரங்களுக்கு மேலாக சிக்கித் தவித்தனர். டோம் என்று அழைக்கப்படும் 17 வயது டுவாங்பெச் புரோம்தெப், அக்குழுவின் தலைவராக இருந்தார்.
இச்சிறுவனின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. காற்பந்து உபகாரச் சம்பளத்தில் அவர் லெஸ்டருக்குச் சென்றிருந்தார்.
டோமின் மரணத்தை உறுதிப்படுத்திய லாப நோக்கமற்ற அமைப்பான 'ஸிகோ' அறநிறுவனம், நேற்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் அதன் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டது.
2018 ஜூன் 23ஆம் தேதி, காற்பந்துப் பயிற்சிக்குப் பிறகு அச்சிறுவர்கள் 'தாம் லுவாங்' குகையைச் சுற்றிப் பார்த்தனர். அவர்களுடைய உதவிப் பயிற்றுநரும் அப்போது உடனிருந்தார்.
பருவமழை காரணமாக அந்தக் குகை மளமளவென நிரம்பியதில் வெளியேற முடியாமல் அவர்கள் 18 நாள்கள் குகைக்குள் சிக்கித் தவித்தனர்.
பின்னர் அச்சிறுவர்களும் உதவிப் பயிற்றுநரும் மூன்று குழுக்களாக மீட்கப்பட்டனர்.