2026 உலகக் கிண்ணம்: அமெரிக்கா, மெக்சிகோ, கனடா தகுதிபெற்றன
லொஸான்: 2026 ஃபிஃபா உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் தானாகவே தகுதிபெற்றுள்ளன.
இந்த மூன்று நாடுகளும் சேர்ந்து 2026 உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தவிருக்கின்றன. உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தும் நாடுகள், தகுதிச்சுற்று ஆட்டங்களில் விளையாடத் தேவையில்லாமல் அப்போட்டியில் கலந்துகொள்ள ஃபிஃபா அனுமதி அளித்து வந்துள்ளது. எனினும், 2026 போட்டியை ஏற்று நடத்தும் மூன்று நாடுகளுக்கு ஃபிஃபா இடம் ஒதுக்கியிருப்பது இதுவே முதன்முறை.
2026 போட்டியில் பங்குபெறும் அணிகளின் எண்ணிக்கை 32லிருந்து 48ஆக உயர்த்தப்படும்.
'2வது ஆட்டத்தில் மீண்டெழுவோம்'
பாரிஸ்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் குழு தகுதிபெறும் என்று அக்குழு வீரர் கிலியன் எம்பாப்பே கூறியுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் ஆட்டத்தில் பயர்ன் மியூனிக்கிடம் 1-0 எனும் கோல் கணக்கில் பிஎஸ்ஜி தோற்றது.
ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய எம்பாப்பே, ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இருமுறை அவர் பந்தை வலைக்குள் புகுத்தினார். ஆனால், 'ஆஃப்சைட்' காரணமாக அந்த கோல்கள் வழங்கப்படவில்லை.
தொடையில் காயம் ஏற்பட்டதால் இரு வாரங்களாக எம்பாப்பே விளையாடவில்லை. இப்போது அவர் காயத்திலிருந்து குணமடைந்துள்ளதால், பயர்ன் அரங்கில் மார்ச் 8ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் வெற்றிபெறும் இலக்குடன் பிஎஸ்ஜி உள்ளது.
அடிமேல் அடி விழுந்தாலும் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது: ஸ்பர்ஸ் நிர்வாகி
மிலான்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் ஆட்டத்தில் ஏசி மிலான் குழுவிடம் 1-0 எனும் கோல் கணக்கில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் தோல்வி கண்டது.
முன்னதாக, இங்கிலிஷ் பிரிமியர் லீக்கிலும் லெஸ்டர் குழுவிடம் 4-1 எனும் கோல் கணக்கில் ஸ்பர்ஸ் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், தம்முடைய வீரர்களுக்குக் கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்துவதே தமது வேலை என்று ஸ்பர்ஸ் நிர்வாகி ஆண்டோனியோ கொண்டே கூறியுள்ளார்.

