ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாலி தீவில் ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் சந்திக்கவிருந்ததற்கு முன்பு வெடிகுண்டு ஒன்று செயலிழக்கப்பட்டிருந்ததாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்தோனீசியாவின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்தது.
உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட ஜி-20 சந்திப்பு சென்ற ஆண்டு நவம்பர் மாத நடுப்பகுதியில் நடைபெற்றது. அதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ஜாவா தீவில் உள்ள பான்தன் மாநிலத்தில் இந்தோனீசியாவின் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் டென்சஸ் 88 பிரிவு சோதனை நடத்தியது.
அப்போது தயார்நிலையில் உள்ள வெடிகுண்டை அதிகாரிகள் செயலிழக்கச் செய்தனர். ஜி-20 சந்திப்பைக் குறிவைத்து அந்த வெடிகுண்டு தயார்செய்யப்பட்டதென ஸ்ட்ரெய்டஸ் டைம்சிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
எனினும், சந்திப்பு நடைபெற்ற பகுதியைச் சுற்றி பலத்த பாதுகாப்பு இருந்ததால் பயங்கரவாதிகளுக்கு பாலித் தீவுக்குள் நுழைவது சவாலாக இருந்திருக்கும் என்று குறிப்பிடப்பட்டது.
"யாராவது பாலிக்குள் நுழையும்போது பிடிபட்டு வெடிகுண்டு வெடித்திருந்தால் சந்திப்பில் கலந்துகொள்ளவிருந்தோர் உடனடியாக தீவைவிட்டு வெளியேறியிருப்பர்," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குத் தகவல் தெரிவித்தவர் கூறினார்.
சென்ற ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் டென்சஸ் 88, மத்திய ஜாவா, பான்தன் ஆகிய மாநிலங்களில் ஐந்து சோதனைகளை நடத்தியது. தாங்கள் சேகரித்த உளவுத் துறை தகவல்களுடன் பொதுமக்களிடமிருந்து கிடைத்த துப்பையும் கொண்டு பிரிவு சோதனைகளை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் டென்சஸ் 88ஐத் தொடர்புகொண்டுள்ளது.

