மீண்டும் ஆதிக்கத்தைச் செலுத்தும் சிட்டி
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லிக் காற்பந்துப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது நடப்பு வெற்றியாளர் மான்செஸ்டர் சிட்டி. பட்டியலில் முதலிடம் வகித்து வந்த ஆர்சனலை சிட்டி, 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது.
இந்த பிரிமியர் லீக் பருவத்தில் சற்று தடுமாறியபடி விளையாடிவந்த சிட்டியிடம் மீண்டும் பழைய வேகம் தென்படுகிறது. அதே வேளையில் எதிர்பாப்புகளை மிஞ்சி பலரை ஆச்சரியப்படுத்தும் வகையில் சிறப்பாக விளையாடி லீக் பட்டியலில் முதலிடம் வகித்த ஆர்சனல் தவறான நேரத்தில் சிரமப்படுவதுபோல் தெரிகிறது.
ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் சிட்டியை முன்னுக்கு அனுப்பினார் கெவின் டி பிரோய்ன். அதற்குப் பிறகு 42வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் ஆர்சனல் நட்சத்திரம் புக்காயோ சாக்கா.
பிற்பாதியாட்டத்தில் 72 நிமிடத்தில் சிட்டியை மீண்டும் முன்னுக்கு அனுப்பினார் ஜேக் கிரீலிஷ். 82வது நிமிடத்தில் எர்லிங் ஹாலண்ட் மேலும் ஒரு கோலைப் போட்டு சிட்டியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
முன்பு இன்டர் உரிமையாளர், இனி
இந்தோனீசியக் காற்பந்துத் தலைவர்
ஜகார்த்தா: ஒரு காலத்தில் பிரபல இத்தாலிய காற்பந்துக் குழுவான இன்டர் மிலானின் உரிமையாளராக இருந்த இந்தோனீசியர் எரிக் தோஹிர், இந்தோனீசியக் காற்பந்துச் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தோனீசியாவில் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்களைக் கவனிக்கும் அமைச்சு உள்ளது. அதில் 52 வயது தோஹிர் அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.
திரு தோஹிர், இந்தோனீசிய ஒலிம்பிக் குழுமத்தின் தலைவராகவும் இருக்கிறார். இத்தாலியின் இன்டர் மட்டுமின்றி அமெரிக்காவின் டிசி யுனைடெட் காற்பந்துக் குழுவின் உரிமையாளராகவும் இருந்தார்.
திரு தோஹிர், 1990களில் பிரபலமடையத் தொடங்கினார். மஹாக்கா எனும் ஊடக நிறுவனத்தை நிறுவினார். அந்நிறுவனம் விளையாட்டு, கேளிக்கை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
அது, இந்தோனீசியாவில் ஆக அதிகமாக வாசிக்கப்படும் செய்தித்தாள்களில் ஒன்றையும் நடத்தி வருகிறது.
மேற்கு இந்தியத் தீவுகளை எளிதில் வென்றது இந்தியா
கேப் டவுன்: பெண்கள் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றுள்ளது இந்தியா.
இந்த இரண்டாம் பிரிவு ஆட்டத்தில் முதலில் பந்தடித்த மேற்கு இந்தியத் தீவுகள் ஆறு விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்களை எடுத்தது. அதற்குப் பிறகு நான்கு விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது இந்தியா.
போட்டியில் இதுவரை ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி கண்டுள்ளது. இரண்டாம் பிரிவில் சிறப்பாக ஆடும் மற்றோர் அணியான இங்கிலாந்துடன் நாளை மோதுகிறது இந்தியா. இரு அணிகளும் தங்களின் முதல் இரு ஆட்டங்களில் வென்றுள்ளன.
பெண்கள் டி20 உலகக் கிண்ணத்தை முதல்முறையாக வெல்லும் இலக்குடன் விளையாடி வருகிறது இந்தியா. இங்கிலாந்து கிண்ணத்தை ஒருமுறை வென்றிருக்கிறது. கிண்ணத்தை ஆக அதிக முறை வென்றுள்ள அணி ஆஸ்திரேலியா.

