அரசாங்க செலவில் தேனிலவு; விவாகரத்தைத் தவிர்க்க திரெங்கானுவில் புதிய முயற்சி

1 mins read
d0d557bc-2c7d-47dc-a082-a5aad35cb9da
-

கோலாலம்பூர்: மலேசியாவின் திரெங்கானு மாநிலத்தில் விவாகரத்து செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதனைக் குறைக்கும் நோக்கில், மாநில அரசாங்கம் தேனிலவு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

திருமண உறவில் சிக்கலை எதிர்கொள்வோர், ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் அத்தம்பதிகள் தேனிலவுக்குச் செல்ல பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

40 இணைகளின் மூன்று நாள் தேனிலவுக்கான செலவை திரெங்கானு அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது.

இத்திட்டத்தின் முந்திய சுற்றில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர் மீண்டும் மணவாழ்வில் இணைந்திருக்க விரும்பியதாகவும் எனவே இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் மாநில நல்வாழ்வு, மகளிர் மேம்பாடு, குடும்ப, தேசிய ஒற்றுமை குழுவின் தலைவர் ஹனிஃபா மாட் சொன்னார். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் விவாகரத்துக்கு வரும் தம்பதிகள், இத்திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுவதாகவும் அவர் சொன்னார்.