கோலாலம்பூர்: தன்னை ஊழல்வாதி என்று கூறுபவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று மலேசியாவின் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளார்.
தாம் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில், கொவிட்-19 தடுப்பூசிகள் கொள்முதல் செய்ததில் ஒரு காசுகூட எடுக்கவில்லை என்று முகைதீன் சொன்னார்.
"மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று சொன்னேன். எனது பதில்கள் அவர்களுக்குத் திருப்தி அளித்ததாகத் தெரிகிறது.
"ஆனாலும் என்னை ஊழல்வாதியாக சித்திரிக்க சிலர் முயற்சி செய்கின்றனர்," என்றார் பெரிக்கத்தான் நேஷனலின் தலைவர் முகைதீன்.
ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால், தன்னை கெட்டவனாக சித்திரித்து, அரசியல் ரீதியாக வெற்றி பெற சிலர் நினைப்பதாகவும் அவர் சொன்னார்.
பூமிபுத்ரா ஒப்பந்தக்காரர்களுக்கான ஜனா விபாவா திட்ட ஊழல் குறித்து விசாரணைக்கு உதவுவதற்கான விளக்கங்களை வழங்கவே தாம் அழைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.