வாஷிங்டன்: அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் ஒரே நபர் நான்கு வெவ்வேறு இடங்களில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டன. கடந்த 48 நாள்களில் 73 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. சென்ற ஆண்டு மட்டும் துப்பாக்கித் தொடர்பான வன்முறைகளால் 44,000 பேர் உயிரிழந்து விட்டனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் உள்ள டேட் கவுண்டியின் அர்கபுட்லா அணை சாலையில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமையன்று மற்றொரு துப்பாக்கிச் சூடு நடந்தது.
அப்பகுதியில் கடையில் இருந்த ஒருவரைச் சுட்டுக் கொன்ற பிறகு, அருகேயிருந்த வீட்டில் இருந்த பெண் ஒருவரையும் சுட்டுக்கொன்றார். அவரது கணவருக்கு இதில் காயம் ஏற்பட்டது.
துப்பாக்கிச் சூடு சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்தனர்.
துப்பாக்கிக்காரனின் வீட்டிற்குள்ளும் காரிலும் மேலும் நால்வர் கொல்லப்பட்டு கிடந்ததும் பின்னர் தெரிய வந்தது.
இதுகுறித்து அம்மாநில ஆளுநர் டேட் ரீவ்ஸ், "துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் தனியாளாகத்தான் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருக்கிறார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது," என்று தெரிவித்தார்.

