அம்மான்: இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிரியா வின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஒரு கட்டடம் தகர்க்கப்பட்டது. இதில் குறைந்தது ஐந்து பேர் மாண்டதாக தாக்குதலை நேரில் பார்த்தோரும் சிரியா அதிகாரிகளும் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட கட்டடம் டமாஸ்கசில் உள்ள கஃபர் சூசா பகுதியில் இருந்தது. சிரியா அரசாங்கத்துக்கு உதவி வரும் ஈரானிய ராணுவம் தளம் அமைத்துள்ள ஒரு வளாகத்துக்கு அருகில் அந்தக் கட்டடம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வளாகம் பல பாதுகாப்பு வளையங்
களைக் கொண்டது என்று அறியப்படுகிறது.
டமாஸ்கசைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது மிகவும் அரிது. இந்நிலையில், நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. தகர்க்கப்பட்ட கட்டடத்தைச் சுற்றி பல குடியிருப்புக் கட்டடங்கள் இருந்ததாகவும் அப்பகுதியில் பொதுமக்கள் பலர் வசிப்பதாகவும் சிரியா அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல் காரணமாகப் பலர் காயமடைந்ததாக சிரியா காவல்துறை கூறியுள்ளது.
இந்த ஏவுகணைத் தாக்குதல் குறித்து இஸ்ரேலிய ராணுவ செய்தித்தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
நேற்றிரவு இஸ்ரேல் வான்
வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் பல குடியிருப்புக் கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் சிரியா ராணுவம் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டது.
குறிப்பிட்ட ஒருவரைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதா என்பது உடனடி
யாகத் தெரியவில்லை.
இதே கஃபர் சூசா பகுதியில் ஈரானின் ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல்லா போராளி அமைப்பின் உயர் தளபதியான இமாட் மௌக்னியே 2008ஆம் ஆண்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.
அப்பகுதியில் ஈரானுக்குச் சொந்தமான பல பாதுகாப்பு அமைப்புகள் இயங்கிவருவதாகவும் மிகப் பெரிய ஈரானிய கலாசார மையம் ஒன்று இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

