பெட்டாலிங் ஜெயா: மலேசியப் பிரதமராக திரு முகைதீன் பதவி வகித்தபோது ஊழலில் ஈடுபட்டதாகச் சந்தேகப்பட்டு தம்மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தினால், முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக அந்நாட்டின் தற்போதைய அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சர் துங்கு ஸஃப்ருல் துங்கு அப்துல் அசிஸ் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளிடம் மறைப்பதற்குத் தம்மிடம் எதுவும் இல்லை என்று சமூக வலைத்தளத்தில் திரு ஸஃப்ருல் தெரிவித்தார். திரு முகைதீனின் ஆட்சியின்போது திரு ஸஃப்ருல் நிதி அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"ஜனா விபாவா திட்டம் பற்றி செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினர். அதுகுறித்து மறைப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை. என்னிடம் அது பற்றி விசாரணை நடத்தினால் விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன்," என்று திரு ஸஃப்ருல் கூறினார்.
ஜனா விபாவா திட்டம் மூலம் ஊழல் நடந்திருப்பதாக பேச்சு நிலவுகிறது.
இதுதொடர்பாக, சாட்சி என்ற அடிப்படையில் ஆணையம் தம்மை அழைத்து விசாரித்ததாக திரு முகைதீன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
ஜனா விபாவா திட்டத்தை திரு ஸஃப்ருல்தான் பரிந்துரைத்ததாக திரு முகைதீன் கூறினார்.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்ட பூமிபுத்திரர்களுக்கு உதவ இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.
இத்திட்டத்திலிருந்து பில்லியன் கணக்கான ரிங்கிட் கையாடல் செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
"நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கவும் ஒப்புதல் வழங்கவும் நிதி அமைச்சுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்பதை ஆணையத்திடம் தெரிவித்தேன்.
"திட்டத்தில் பங்கெடுக்கும் நிறுவனங்கள் குறித்து பிரதமர் அலுவலகத்தால் பரிந்துரை
மட்டுமே செய்ய முடியும்," என்று திரு முகைதீன் தெரிவித்தார்.
ஜனா விபாவா திட்டத்தின்கீழ் 5.7 பில்லியன் ரிங்கிட் (S$1.7 பில்லியன்) பெறுமானமுள்ள கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக மலேசியாவின் கிராம, வட்டார மேம்பாட்டு அமைச்சர் அகமது ஸாஹிட் ஹமிடி கடந்த புதன்கிழமையன்று தெரிவித்தார்.

