விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
d94e9535-638d-42f3-b75a-49666126ae97
-

லெஸ்டரை வீழ்த்திய மேன்யூ

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் லெஸ்டர் சிட்டியை 3-0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் நேற்று முன்தினம் வீழ்த்தியது.

ஆட்டத்தின் முற்பாதியிலும் பிற்பாதியிலும் யுனைடெட்டின் மார்கஸ் ரேஷ்ஃபர்ட் கோல்கள் போட்டார்.

ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஜேடன் சாஞ்சோ யுனைடெட்டின் மூன்றாவது கோலைப் போட்டார்.

இந்த வெற்றி மூலம் யுனைடெட் 49 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

வெற்றியுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறிய ஸ்பர்ஸ்

லண்டன்: வெஸ்ட் ஹேம் குழுவை நேற்று முன்தினம் 2-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்த ஸ்பர்ஸ், இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பிற்பாதி ஆட்டத்தில் ஸ்பர்ஸ் இரண்டு கோல்களைப் போட்டு வெற்றியை உறுதி செய்தது. அண்மையில் லெஸ்டர் சிட்டியிடமும் ஏசி மிலானிடமும் தோல்வி அடைந்த ஸ்பர்சுக்கு இந்த வெற்றி நிவாரணத்தைத் தந்துள்ளது.

சாம்பியன்ஸ் லீக்: லிவர்பூல்-ரியால் மட்ரிட் இன்று மோதல்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ள லிவர்பூல், சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று அதன் நிர்வாகி யர்கன் கிளோப் தமது ஆட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முந்திய ஆட்டத்தில் ஸ்பானிய ஜாம்பவான் ரியால் மட்ரிட்டை லிவர்பூல் இன்று சந்திக்கிறது.

2018ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் லிவர்பூலை ரியால் தோற்கடித்தது. 2021ஆம் ஆண்டில் காலிறுதி வரை சென்ற லிவர்பூலை போட்டியிலிருந்து வெளியேற்றியது ரியால்.

கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் இவ்விரு குழுக்களும் மீண்டும் மோதின. இதில் ரியால் 1-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணம் ஏந்தியது. பாரிசில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியாலின் வெற்றி கோலை வினிசியஸ் ஜூனியர் போட்டார்.

எனவே, ரியாலைப் பழிவாங்கும் நேரம் கனிந்துவிட்டதாக கிளோப் தெரிவித்துள்ளார்.