கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசினின் கட்சியில் உள்ள இரு உறுப்பினர்கள்மீது ஊழல், தவறான முறையில் பொருள்களையோ சேவைகளையோ பெற முயற்சி செய்வது ஆகியவற்றின் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் வான் சைஃபுல் ஜான்மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஜானா விபாவா எனும் திட்டத்தின்கீழ் நிறுவனம் ஒன்றிடமிருந்து 6.9 மில்லியன் ரிங்கிட் (2.08 மில்லியன் வெள்ளி) தொகையைப் பெற்றதன் தொடர்பில் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஜானா விபாவா திட்டத்தின்கீழ் அதே நிறுவனத்திடமிருந்து சாலைத் திட்டம் ஒன்றுக்கு தவறான முறையில் 232 மில்லியன் ரிங்கிட் (69.9 மில்லியன் வெள்ளி) பெற முயன்றதாக மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் பூமிபுத்ராவினருக்குக் கைகொடுக்க ஜானா விபாவா வரையப்பட்டது.
திரு வான் சைஃபுல் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
செகாம்புட் பகுதிக்கான பெர்சத்து கட்சித் தலைவர் அதாம் ராட்லான் அதாம் முகம்மது மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஜானா விபாவாவுடன் தொடர்புடைய ஒரு திட்டத்துக்கான மொத்த மதிப்பில் 3.5லிருந்து ஏழு விழுக்காடு வரையிலான தொகையை 'எம்ஐஇ இன்ஃபிராஸ்ட்ரக்சர் ஆண்ட் எனர்ஜி' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடமிருந்து தவறான முறையில் பெற முயன்றதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதே நபரிடமிருந்து திரு அதாம் 500,000 ரிங்கிட்டைக் (150,636 வெள்ளி) கையூட்டாகப் பெற்றதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

