விளையாட்டுத் துளிகள்

விளையாட்டுத் துளிகள்

2 mins read
30d8f922-51f8-433d-aa13-48368f7cf09e
-

பெண்கள் டி20 உலகக் கிண்ணம்: அரையிறுதியில் இந்தியா

போர்ட் எலிசபெத்: தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான இரண்டாம் பிரிவு ஆட்டத்தில் இந்தியா டிஎல்எஸ் முறையில் ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பந்தடித்த இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்தது.

இலக்கை விரட்டிய அயர்லாந்து 8.2 ஓவர் முடிவில் 54 ஓட்டங்களை எடுத்திருந்தது. பின்னர் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் டிஎல்எஸ் முறையில் ஆட்ட முடிவு அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் பிரிவிலிருந்து இங்கிலாந்தும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

சீனக் காற்பந்தில் ஊழல் இடம்பெற்றதாக சந்தேகம்

பெய்ஜிங்: சீனாவில் காற்பந்துக் கட்டமைப்பின் ஆக உயரிய பிரிவில் ஊழல் இடம்பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங்கின் கனவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உலகக் காற்பந்தில் சீனா பெரிய அளவில் முத்திரை பதிக்கவேண்டும் என்பது திரு ஸியின் கனவு. உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்துவது மட்டுமின்றி சீனா கிண்ணத்தையும் ஒருநாள் வெல்லவேண்டும் என்பது அவரின் ஆசை.

சீனா இதுவரை 2002ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்கு மட்டுமே தகுதிபெற்றுள்ளது. அதில் அணி முதல் சுற்றைத் தாண்டவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு சீனக் காற்பந்துக் குழுக்கள் அதிகம் செலவு செய்து பல நட்சத்திர விளையாட்டாளர்களைக் களமிறக்கவும் செய்தன. எனினும், நிதி நெருக்கடி, கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நடப்பில் இருந்த கடுமையான விதிமுறைகள் உள்ளிட்டவற்றால் பல குழுக்கள் நொடித்துப் போக நேரிட்டது. இப்போது ஊழல் பிரச்சினைகளும் தலைதூக்கியுள்ளன.

ஊழலுக்கு எதிராகத் திரு ஸி எடுக்கும் நடவடிக்கைகளில் அந்நாட்டின் காற்பந்து அதிகாரிகள் சிலர்மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சீனக் காற்பந்துச் சங்கத் தலைவர் சென் சூயூவான் சந்தேக நபர்களில் ஒருவர்.

முன்னாள் லயன்ஸ் அணித்தலைவர் ஷாரில் இஷாக் ஓய்வு

லயன்ஸ் என்றழைக்கப்படும் சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணியின் தலைவர் ஷாரில் இஷாக் ஓய்வுபெறப் போவதாகத் தெரிவித்துள்ளார். இன்ஸ்டகிராம் சமூக ஊடகம் வாயிலாக அவர் நேற்று முன்தினம் இதைத் தெரிவித்தார்.

"எனக்கு இப்போது 39 வயதாகிறது. விளையாடுவதிலிவிருந்து ஓய்வுபெற இதுவே ஆகச் சிறந்த வேளை என்று நான் நினைக்கிறேன்," என்று ஷாரில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

ஷாரில் சிங்கப்பூருக்கு 138 முறை விளையாடியுள்ளார். சிங்கப்பூருக்கு ஆக அதிக முறை விளையாடிய வீரர்கள் பட்டியலில் அவர் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். டேனியல் பெனெட், பாய்ஹாக்கி கைஸான் ஆகியோர் அவரைவிட அதிக முறை சிங்கப்பூருக்கு விளையாடியவர்கள்.